நாடு தழுவிய முழு முடக்க நடவடிக்கை காரணமாக 90 க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்று மாசு குறைந்திருக்கின்றது.
New Delhi: சர்வதேச அளவில் கொரோனா தொற்று பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதையொட்டி பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.
ஏற்கெனவே பிரதமர் மோடி 21 நாள் முடக்க நடவடிக்கையினை கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதன் காரணமாகத் தேசிய அளவில் பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வட மாநிலத்தில் இடம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிரமத்திற்கு செல்ல தொடங்கியிருந்தனர். போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டதால் அவர்கள் பல நூறு மைல்களை நடந்தே கடக்கத் தொடங்கினர். இவ்வாறாக சொந்த கிராமங்களுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்காக அந்தந்த மாநில அரசுகள் பேருந்து வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தது.
ஆனால், இந்த முழு முடக்க நடவடிக்கையினை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், தொழிலாளர்கள் இடம் பெயர்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவர்கள் பணியாற்றிய மாநிலத்திலேயே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியிருக்கின்றது. இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இந்த முழு முடக்க நடவடிக்கையினை எதிர்த்து பலர் பொதுவெளியில் பிரவேசிப்பதை எச்சரித்திருந்தார். மேலும், இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் தங்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது 1024 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இடம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பிரதமர் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
- "மனதின் குரல்" வானொலி நிகழ்ச்சியில் "உங்கள் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்திய இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக ஏழை மக்கள். உங்களில் சிலர் என் மீதும் கோபப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த போரில் வெற்றி பெற இந்த கடுமையான நடவடிக்கைகள் தேவை" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
- ஒட்டுமொத்தமாக 27 பேர் இந்த தொற்றால் மரணமடைந்திருக்கின்றனர். தமிழகம், மேற்குவங்கம், கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், ஜம்மு&காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், மற்றும் பீகார் மாநிலங்களில் தலா ஒரு ஒருவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 பேரும், மத்தியப் பிரதேசம் 2, கர்நாடகா 3, குஜராத் 4, டெல்லி 2 பேர் என கொரோன பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
- இடம் பெயர் தொழிலாளர்களை அதே மாநிலங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. அவர்களுக்கான உணவு மற்றும் இருப்பிடம் போன்றவற்றை மாநில அரசுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அதையும் மீறி சொந்த ஊர்களுக்குத் திரும்பும் தொழிலாளர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் தங்கவைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. முழு முடக்க நடவடிக்கையினை மாநில அரசுகள் முற்றிலுமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
- உத்தரப் பிரதேசத்திற்கு வந்து சேர்ந்த இடம் பெயர் தொழிலாளர்கள் 1.5 மேற்பட்டோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
- நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு தங்களுடைய கிராமங்களுக்குச் செல்லும் இடம் பெயர் தொழிலாளர்கள் இப்போதைக்குச் செல்ல வேண்டாம் என்றும், தொழிலாளர்களுக்கான தங்குவதற்கான ஏற்பாடும், உணவுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருப்பதாகவும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்ரில் தெரிவித்திருந்தார்.
- இடம் பெயர் தொழிலாளர்கள் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாவது குறித்து காங்கிரஸ் கட்சி பா.ஜ.க மீது கடுமையான விமர்சனத்தினை முன்வைத்திருக்கின்றது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு அடுத்து மிக மோசமான இடப்பெயர்வு இது என்று இந்த சூழலைக் காங்கிரஸ் விமர்சித்திருக்கின்றது. மேலும், இவ்வாறு இடம் பெயரும் தொழிலாளர்களின் நலன் குறித்து பா.ஜ.க மறந்துவிட்டதாகவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இந்த இடப் பெயர்வு என்பது எதிர்பாராதது அல்ல, அப்படியிருக்கையில் அரசு ஏன் மூக சமையலறைகள் மற்றும் அங்கன்வாடி போன்ற பிற அமைப்புகளை ஏன் உருவாக்கவில்லை என்ற கேள்வியைக் காங்கிரஸ் முன்வைத்திருக்கின்றது.
- ஏற்கெனவே உள்நாட்டு விமான சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில் மனிதாபிமான பணிகளுக்கா தங்களது சேவை தயாராக இருப்பதாகவும், அரசாங்கத்திற்கு உதவ தயாராக இருப்பதாகவும் ஸ்பைஸ் ஜெட் குறிப்பிட்டிருக்கின்றது. மேலும், இடம் பெயர் தொழிலாளர்களுக்காக மும்பை மற்றும் டெல்லியிலிருந்து பாட்னாவுக்கு தங்களது விமான சேவை தொடர இருப்பதாகவும் அந்நிறுவன அதிகாரி அஜய் சிங் தெரிவித்திருந்தார்.
- ஏற்கெனவே ஈரானிலிருந்து அழைத்துவரப்பட்ட 275 இந்தியர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ராணுவ மருத்துவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள். முன்னதாக இம்மாத தொடக்கத்தில் ஈரானிலிருந்து அழைத்துவரப்பட்ட 277 இந்தியர்கள் இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.
- நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமலில் உள்ள நிலையில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கின்றது. இதனால், தேசிய அளவில் 90க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் 2.5 பி.எம் அளவு 30 சதவிகிதமாகவும், புனே மற்றும் அகமதாபாத்தில் 15 சதவிகிதம் அளவிலும் காற்றில் நுண் துகள் மாசுபாடு குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
- மனித சமூகம் இதற்கு முன்பு கண்டிராத கொரோனா வைரஸ் -2, SARS-CoV-2 என அழைக்கப்படுகிறது. இது கோவிட்-19 என்கின்ற தொற்றை உருவாக்குகிறது. முதலில் சீனாவில் வுஹான் நகரில் இந்த தொற்று கண்டறியப்பட்டிருந்தது.