This Article is From Apr 14, 2020

47 சதவீதம் பேர் டிஸ்சார்ஜ்... கொரோனாவை விரட்டும் கேரளா.. குவியும் பாராட்டு!!

கேரளாவில் கடந்த ஒருவாரமாக கொரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது.

47 சதவீதம் பேர் டிஸ்சார்ஜ்... கொரோனாவை விரட்டும் கேரளா.. குவியும் பாராட்டு!!

கேரள அரசின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஹைலைட்ஸ்

  • கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களில் 47 சதவீதம்பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்
  • பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
  • இம்மாத இறுதிக்குள் கொரோனா ஒழிக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை
Thiruvananthpuram, Kerala:

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமான கேரளாவில் தற்போது 179 பேர் அதாவது 47 சதவீதம்பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் இங்கு 376 பேருக்கு பாதிப்பு இருந்தது. இவர்களில் 179 பேர் குணமடைந்தது மற்றும் 2 உயிரிழப்புகளை தவிர்த்து மாநிலத்தில் 195 நோயாளிகளே (Active Cases) தற்போது உள்ளனர்.

அதாவது மொத்த பாதிப்பில் சுமார் 47 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதைவிட குறிப்பிடவேண்டிய தகவல் என்னவென்றால், கடந்த ஒரு வாரமாக நாள் தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக உள்ளது. 

இதே நிலைமை நீடித்தால் கேரளாவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும், பாதிப்பு படிப்படியாக கட்டுக்குள் வந்துவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், 'கேரளாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் அதிகமாகி வருகின்றனர். விரைவில் அனைவரும் நலம் பெறுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
 

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு கேரளா மேற்கொண்ட நடவடிக்கைகளை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். நாட்டின் திட்டக் கமிஷனாக செயல்படும் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தனது ட்விட்டர் பதிவில், 


'கொரோனா பாதிப்பை சிறப்பாக எதிர்கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கேரள மக்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். கேரளாவில் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா உயிரிழப்பு 5.75 சதவீதமாக உள்ளது. ஆனால் கேரளாவில் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இங்கு கொரோனா உயிரிழப்பு 0.58 சதவீதமாக இருக்கிறது' என்று பாராட்டியுள்ளார்.
 

இன்னும் சில நாட்களில் கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வீட்டு உபயோக பொருட்களை ரிப்பேர் பார்க்கும் கடைகள், மொபைல் சர்வீஸ் கடைகள் திறக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 

நாட்டிலேயே முதன்முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாநிலம் கேரளா. இங்கு கடந்த ஜனவரி 30-ம்தேதி முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. சீனாவின் வுஹான் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த கேரள மாணவிக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது. அதன்பின்னர் பிப்ரவரி 3-ம்தேதி மேலும் 2 மாணவிகள் சீனாவிலிருந்து கேரளா திரும்பினர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

அதற்கடுத்த நாட்களில் வெளிநாடுகளில் இருந்து மக்கள் வரத் தொடங்கியதால் பாதிப்பு அதிகரித்தது. கேரளாவில் மொத்தம் பாதிக்கப்பட்ட 376 பேரில் 232 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 

Test and Tracking எனப்படும் சோதனையை அதிகரித்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை துல்லியமாக கண்டுபிடித்து  அவர்களை தனிமைப்படுத்துதல் என்ற இந்த திட்டத்தை கேரளா சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. 

மேலும் மொபைல் ஆப்கள் மூலம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டனர். 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டதுடன், மக்களின் அத்தியாவசிய பொருட்கள் எளிதாக கிடைக்கும்படி கேரள அரசு பார்த்துக்கொண்டது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக விடுபட்ட மாநிலமாக கேரளா விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.