ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 1,330 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Mumbai: மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் மட்டும் 114 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் 1,330 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.
நேற்று முன்தினம் நிலவரப்படி 1,216 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. புதன் அன்று மட்டும் 131 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் மும்பையில் 55 வயதுக்கு மேற்பட்ட போலீசார் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 52 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ நிலைமைகளைக் கொண்டவர்கள் ஆகியோரும் இதேபோல் அறிவுறுத்தப்பட்டனர்.
கொரோனா பாதிப்பில் நாட்டின் மிக மோசமான மாநிலமாக விளங்கும் மகாராஷ்டிரா முழுவதும், 2,682 பாதிப்புகள் மற்றும் 116 இறப்புகள் வெள்ளியன்று மட்டும் பதிவாகியுள்ளன,
மும்பையில், இதுவரை 36,932 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 1,173 பேர் உயிரிழந்துள்ளனர்; வெள்ளியன்று 1,447 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 38 இறப்புகள் பதிவாகியுள்ளன.
பொதுமுடக்கத்தின் நான்காவது கட்டம் ஞாயிறன்று நள்ளிரவுடன் முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது. 5-வது கட்ட பொது முடக்கத்தினபோது பல்வேறு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மே 21 முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 6,000 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது, கடைசி 2 நாட்களில் மட்டும் சராசரி பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 1.74 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 9-வது இடத்திற்கு கடந்த ஒருவாரத்தில் முன்னேறியுள்ளது.