This Article is From Mar 19, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்வு! - முக்கிய தகவல்கள்

Coronavirus: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்வு! - முக்கிய தகவல்கள்

Coronavirus in India: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்வு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயர்வு!
  • ஜம்மு - காஷ்மீரிலும் முதலாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
  • டெல்லியில் இருந்து சென்னை வந்த 20 வயது இளைஞருக்கு வைரஸ் பாதிப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தொற்று நோய் பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக மக்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதனை தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலே இருக்கும் படியும் அரசு பல ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 

ஜம்மு - காஷ்மீரிலும் முதலாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர், ஸ்ரீநகரில் ஒரு நெரிசலான பகுதியில் வசித்து வந்துள்ளார். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நகராட்சி அதிகாரி ஜூனைத் அஸிம் மாத்து தெரிவித்துள்ளார். 

இதேபோல், நேற்றைய தினம் டெல்லியிலிருந்து சென்னை வந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா சமூக பரிமாற்றமாக உருவெடுத்துள்ளதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. 

இதுவரை பரிசோதிக்கப்பட்ட 826 மாதிரிகளில் எதிலும் கொரோனா அறிகுறிகள் இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிராகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாகப் பிரதமர் மோடி தலைமையில் உயர் மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்றைய தினம் நடந்தது. 

கடந்த வாரங்களில், பல்வேறு மாநில அரசுகளும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடிவிட்டன. வணிக வளாகங்கள் மற்றும் மல்டிபிளெக்ஸ், விளையாட்டு மைதானங்களில் கூடுவதைத் தவிர்க்கும் படியும், மக்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். 

மேற்கு ரயில்வேயின் (WR) புறநகர் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை எட்டு லட்சமாக, சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது" என மேற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் பகர் கூறினார். புறநகர் சேவைகள் மும்பையின் உயிர்நாடியாகும், தினமும் அதனை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

நேற்றைய தினம் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஒருவர் விமான நிலைய அதிகாரிகளால் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அங்குள்ள ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்த்துவிட்டுத் தப்பிச்செல்வதால், தொற்றுநோயைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த மாணவர்கள் உட்பட 405 பேர் இந்திய அழைத்துவரப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போரில் சீனா இன்று ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. முதன்முறையாக உள்நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாகப் பதிவு செய்துள்ளது. எனினும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதன் முன்னேற்றத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. 

.