முடங்கியுள்ள கொல்கத்தா புகைப்படம்
ஹைலைட்ஸ்
- தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் அமல்!
- ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
- இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதம் விதிக்கப்படலாம்
New Delhi: இயற்கை அல்லது மனிதனால் உருவான பேரழிவுகளைக் கையாளும் பொருட்டு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் இன்று நாட்டில் முதன்முறையாக அமல்படுத்தப்பட்டது. இது கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான போரில் மாநிலங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.
சுகாதாரம் என்பது பொதுவாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு உள்துறை அமைச்சகம் அளித்த உத்தரவில், கொரோனா வைரஸ் நாட்டிற்கு ஒரு "அச்சுறுத்தல்" என்று கூறியதோடு, அதற்கான "பயனுள்ள நடவடிக்கைகளைப் பேரிடர் ஆணையம் எடுப்பது அவசியம் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களின் மூத்த அதிகாரிகளும், டெல்லியின் உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சரவை செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்கள் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஊரடங்கு உத்தரவா இல்லையா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் என்பது ஒரு தொற்றுநோய் என்றும், இது அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதன் மூலம் சிக்கல்களை உருவாக்கும் என்றும், அதன் பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய அதிகாரிகள் விளக்கினர். இது ஒரு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு அல்ல என்றும், இங்கு சிக்கல்களுக்கு காரணமானவர்களை அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ”ஊரடங்கு உத்தரவு போன்ற முடக்கம்” என்று குறிப்பிட்டார்.
இந்த ஊரடங்கு தடை உத்தரவை மீறுபவர்களுக்குத் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தண்டனைகள் வழங்கப்படும் என்றும், இதுவரை அமல்படுத்தப்பட்ட முடக்கத்தை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டதை தொடர்ந்து, இதனை கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், "தவறான எச்சரிக்கைகள்" அல்லது "பணம் மற்றும் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்துதல்" போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் - இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். சட்டப் பிரிவு 188 படி ஆறு மாத சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இந்த கூட்டத்தில், சுகாதார அதிகாரிகள் - மருத்துவர்கள் மற்றும் உதவி ஊழியர்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கும் கூறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. நாட்டின் சில பகுதிகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார வல்லுநர்கள் குறிவைக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்த விஷயம் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டுள்ளது.