டெல்லியில் மெட்ரோ ரயிலை இயக்க அனுமதிக்க மத்திய அரசினை அர்விந்த் கெஜ்ரிவால் கோரியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த இறுதி முடிவினை மாநில அரசுகளே எடுக்கும்
- செப்டம்பர் 1 முதல் டெல்லி மெட்ரோ சேவை தொடங்க வாய்ப்பு
- டெல்லியில் தளர்வுகளை மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், தற்போது நடைமுறையில் உள்ள மூன்றாம் கட்ட அன்லாக் செயல்முறை முடிந்து அடுத்த அன்லாக் செயல்முறையில் மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதியளிக்க வாய்ப்பிருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆனால், மக்கள் அதிகமாக கூடுவதற்கும், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த இறுதி முடிவினை மாநில அரசுகளே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் டெல்லி மெட்ரோ சேவை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக நேற்று வர்த்தகர்கள், தொழில்முனைவோர், வணிகர்களுடன் இணைய வழியாக கலந்துரையாடிய டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் சில தளர்வுகளை மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமென” கோரியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
மேலும், “டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிற நகரங்களுக்கு மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு காலந்தாழ்த்தினால் பரவாயில்லை, ஆனால், டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் சோதனை அடிப்படையில் தொடங்க வேண்டும்.” என்றும் மத்திய அரசிடம் அவர் தெரிவித்திருந்ததாக கூறியுள்ளார்.
2 மணிநேரத்திற்கு குறைவான பயண நேரத்தை கொண்ட மெட்ரோ போக்குவரத்தினை மட்டுமே மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஜூலை 30 நடைமுறைப்படுத்தப்பட்ட அன்லாக் 3 செயல்முறை இரவு ஊரடங்கை ரத்து செய்தது. மேலும், கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர்த்து உள்ள பிற இடங்களில் உடற்பயிற்சி கூடங்களையும் யோகா நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், திரையரங்குகளையும் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் ஒரு நாள் எண்ணிக்கையில் கொரோனா தொற்று மிகப்பெரும் அளவினை பதிவு செய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 61,408 புதிய கொரோனா நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 57,542 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை டெல்லி அதிகப்பட்சமாக 1,450 புதிய கொரோனா நோயாளிகளை பதிவு செய்திருந்தது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1.61 லட்சமாகவும் ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,300 ஆகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.