புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்குச் செல்வதற்குக் கட்டணம் செலுத்த வேண்டுமென மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 ஆயிரத்தினை நெருங்குகின்ற நிலையில், மத்திய அரசின் முன் ஏற்பாடுகள் இல்லாத முழு முடக்க நடவடிக்கையின் காரணமாக லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள், தாங்கள் வேலை செய்து வந்த மாநிலங்களிலேயே முடங்கியுள்ளனர். தற்போது முழு முடக்க நடவடிக்கை மேலும், இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ரயிலில் பயணம் செய்யும் புலம் பெயர் தொழிலாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என இரயில்வே துறை கட்டாயப்படுத்தியுள்ளது.
என்.டி.டிவியிடம் உள்ள ரயில்வே துறையின் சுற்றறிக்கையில் “உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட்டுகளை கொடுத்து கட்டணம் வசூலிக்க வேண்டும். இவ்வாறு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.
சில மாநில அரசுகள் அதாவது பாஜக ஆளக்கூடிய மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தாலும், மத்திய எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநில அரசுகள் இதற்கான கட்டணங்களை மத்திய அரசே ஏற்க வேண்டும் என கோரியுள்ளன.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “புலம் பெயர் தொழிலாளர்களிடமிருந்து இவ்வாறு கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது. மத்திய அரசு பெரும் முதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடிகளைச் செய்துவிட்டு புலம் பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் கேட்கிறது. மத்திய அரசு ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது” என ட்விட்டரில் இந்தியில் கண்டனம் தெரிவித்துள்ளார். (அவருடைய கருத்துகள் தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)
இதேபோல என்.டி.டிவியிடம் பேசிய ஜார்கண்ட முதல்வர் ஹேமந்த் சோரனும் இதே விமர்சனத்தை முன்வைத்திருந்தார். “ஜார்கண்ட அரசு புலம் பெயர் தொழிலாளர்களிடம் கட்டணத்தினை வாங்காது. அவர்கள் பெரும் துன்பத்தில் தற்போது உள்ளனர். மத்திய அரசு கட்டணத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டால், ஜார்கண்ட மாநில அரசு இந்த கட்டணத்தினை செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும். தவிர எக்காரணத்தினை கொண்டும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் கட்டணத்தினை வசூல் செய்யாது.“ என ஹேமந்த் சோரனும் கூறியிருந்தார்.
“சரக்கு மற்றும் சேவை வரி வசூல் தற்போதைய நெருக்கடி காலகட்டங்களில் அதிக அழுத்தத்தினை ஏற்படுத்துவதாக“ சத்தீஸ்கர் அரசாங்கத்தின் மூத்த செயல்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பி.எம். கேர்ஸ் நிதி குறித்தும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட முழு முடக்க நடவடிக்கை காரணமாக அனைத்து தொழில்சார்ந்த நடவடிக்கையும் முடக்கப்பட்டன. நாட்டில் குறிப்பிட்ட சதவிகித மக்கள் முறைசாரா தொழிலாளர்களாகச் சிறு குறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் முழு முடக்க நடவடிக்கை இவர்களின் வாழ்வாதாரத்தினை முற்றிலுமாக பாதித்தது. பல்வேறு அழுத்தங்களுக்கு பிறகு மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தியது.