This Article is From Apr 09, 2020

"நீங்கள் எங்கள் ஹீரோ": விமானியின் தனிமைப்படுத்தலை கொண்டாடிய சென்னை குடியிருப்பாளர்கள்!

கடந்த மாதம் 15-ம் தேதி மஸ்கட்டிலிருந்து திரும்பிய ஏர் இந்தியா விமானி கேப்டன் மணீஷ் சர்மாவை 28 நாள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் சுகாதார அதிகாரிகள் வைத்திருந்தனர்.

கேப்டன் மனிஷ் சர்மா வீட்டிற்கு வெளியே உள்ள புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது

Chennai:

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் அல்லது வெளி நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் தொடர்ந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், தங்கள் அண்டை வீட்டில் வசிக்கும் ஏர் இந்தியா விமானியின் வீட்டு தனிமைப்படுத்தலை கொண்டாடினர். மருத்துவர்கள், செவிலியர்கள், விமானிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா தொற்று நோயாளிகளை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் அவர்கள் மக்களின் ஹீரோவாக பார்க்கப்படுகின்றார்கள்.

கடந்த மாதம் 15-ம் தேதி மஸ்கட்டிலிருந்து திரும்பிய ஏர் இந்தியா விமானி கேப்டன் மணீஷ் சர்மாவை 28 நாள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் சுகாதார அதிகாரிகள் வைத்திருந்தனர். பலர், தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறு வலியுறுத்தி இருப்பினும், தனிமைப்படுத்தலில் உள்ள நபரை சுற்றியுள்ள அண்டை வீட்டார்கள் இவர்களுக்கு இரக்கம் காட்டுகின்றனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பில் வசித்துவரும் ஏர் இந்தியா விமானி கேப்டன் மணீஷ் சர்மாவுக்கு "உங்கள் அனைத்து சேவைகளுக்கும் நன்றி கேப்டன் மனீஷ். நீங்கள் எங்கள் ஹீரோ" என ஒரு விமானத்தின் வரைபடத்துடன் குடியிருப்பாளர்கள் தங்கள் கையால் எழுதப்பட்ட நன்றி குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

விமானியின் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைய இன்னும் ஒரு வார நாட்கள் இருக்கக்கூடிய நிலையில், “என் அண்டை வீட்டினர் எனக்கு காட்டிய அன்பான குறிப்பு இது” என விமானி நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

விமானி வசிக்கும் ஸ்ரேஷ்டா ரிவர்சைடு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அனில் பி ஜோசப், என்.டி.டி.வி யிடம், "இது கேப்டன் மனீஷ் சர்மா மற்றும் கொரோனா தொற்று ஒழிப்பில் முன்னணியில் உள்ளவர்களுக்கான எங்கள் நன்றியின் அடையாளமாகும்” என்று இந்த நிகழ்வினை குறிப்பிட்டுள்ளார். மேலும், ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து கொரோனா தொற்று எதிரான களத்தில் உள்ள மற்ற வீரர்களையும் நாங்கள் அங்கீகரித்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே குடியிருப்பில் வசித்து வரும்  மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக சுகாதார இயக்குநரகத்தின் தலைவராக பணியாற்றிய குழந்தைசாமிக்கு 52 குடும்பங்கள் இணைந்து இவரின் உழைப்பை அங்கீகரித்து நன்றி தெரிவித்திருந்தனர். மேலும், "நீங்கள் எங்கள் சுகாதார ஹீரோ" என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

டாக்டர் குழந்தைசாமி 15 மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் செலவிடுகிறார். எங்கள் குடியிருப்பில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு மயக்க மருந்து டாக்டர் கிருஷ்ணசாமியும் இருக்கிறார் என்று அனில் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

குடியிருப்பு வாசிகள் நன்றி தெரிவித்து கேப்டன் மனிஷ் சர்மா வீட்டிற்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், விமான ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான பார்வையில் இது வரவேற்கத்தக்க மாற்றமாக உள்ளது என்று, இந்த இடுகையைப் பகிர்ந்துகொண்ட சென்னை குடியிருப்பாளரான சுவர்ணா சி கே தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியிலிருந்து வரும் சதகமான சிந்தனையோட்டம் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.

.