“இந்திய மக்கள் இந்த வைரஸுக்கு எதிரான போரில் சீக்கிரமே வென்று விடுவார்கள் என்று நம்புகிறோம்"
ஹைலைட்ஸ்
- சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
- தற்போது சீனாவில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
- இந்தியளவில் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
New Delhi: கோவிட்-19 என சொல்லப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஆதரவளித்ததற்காக சீனா, இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவத் தயார் என்றும் உறுதியளித்துள்ளது.
புது டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜி ராங், “சீன நிறுவனங்கள் இந்தியாவுக்கு நன்கொடை அளிக்க ஆரம்பித்துள்ளன. இந்தியாவுக்கு எந்த உதவி தேவை என்றாலும் எங்களால் முடிந்த வகையில் உதவி புரிய தயாராகவே உள்ளோம்.” என அறிக்கை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றால், 81,000 பேர் பாதிக்கப்பட்டனர். 3,200-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில்தான் இந்திய அரசுத் தரப்பு முன்னதாக, சீனாவுக்கு 15 டன் எடை கொண்ட மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்தது.
இது குறித்து ராங் தெரிவிக்கையில், “சீனாவுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியது இந்தியா. இந்திய மக்கள், சீனாவுக்குப் பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள உறுதுணையாக இருந்தார்கள். அதற்காக நாங்கள் நன்றியுடன் உள்ளோம்,” என நெகிழ்ந்துள்ளார்.
தற்போது உலகத்தின் பல்வேறு இடங்களுக்குப் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் சீனா, சமீபத்தில் இந்தியா உட்பட பல ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீடியோ கான்ஃபரென்சிங் மூலம், கொரோனா பரவலை எப்படி சமாளிப்பது என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது.
“இந்திய மக்கள் இந்த வைரஸுக்கு எதிரான போரில் சீக்கிரமே வென்று விடுவார்கள் என்று நம்புகிறோம். மற்ற நாடுகளுடன் இணைந்து சீனா, கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராடும். ஜி20 மற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம். இதன் மூலம் உலகில் உள்ள மனித சமூகத்தின் நலம் மற்றும் ஆரோக்கியத்தை உயர்த்தப் பாடுபடுவோம்,” என அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார் ராங்.