மே 4-ம்தேதிக்கு பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஒரேயடியாக நீக்கி விடாமல் 2 வாரங்களுக்கு பின்னரே முழுமையாக நீக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு மே 3-ம்தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு நாட்டில் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதனால் வரும் 27-ம்தேதி அனைத்து மாநில முதல்வர்களை மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கையை பிரதமர் மோடி தொடங்கவுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான கூட்டத்தில் என்ன ஆலோசனை வழங்குவீர்கள் என்பது குறித்து மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
கொரோனா பாதிப்பை விட அதனால் ஏற்படும் அச்சம்தான் மிக மோசமாக உள்ளது. இந்திய குடிமகள் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க வேண்டும் என்றுதான் நான் பரிந்துரைப்பேன்.
மொத்தம் 3 கட்டமாக கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும். மே 4-ம்தேதிக்கு பின்னர் முதல் வாரத்திற்கு 25 சதவீத கட்டுப்பாடுகளையும், அதற்கு அடுத்த வாரம் 50 சதவீத கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். 2 வாரம் கழித்துதான் முழு கட்டுப்பாடுகளையும் நீக்கி இயல்பு நிலையை திரும்பக் கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக நீண்ட தொலைவு செல்லும் ரயில்கள், விமானங்கள் ஆகியவற்றை உடனடியாக இயக்கக்கூடாது. கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
டெங்கு பாதிப்பு மேற்கு வங்கத்தில் ஏற்பட்டபோது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் வரை நாங்கள் சிகிச்சை அளித்தோம். எனவே மாநிலத்தில் போதுமான மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் ஊரடங்கை ஆய்வு செய்ய மத்திய அரசு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.
இதற்கு மேற்கு வங்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்றுடன் இந்த விவகாரம் சுமுகமாக முடித்து வைக்கப்பட்டது. மத்திய சிறப்புக்குழுவுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என மம்தா அரசு தெரிவித்துள்ளது.
World
India
State & District Details
State | Cases | Active | Recovered | Deaths |
---|