சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி!
New Delhi: சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கொரோனா சோதனை முடிவில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நான் என்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
தொடர்ந்து, அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் மருத்துவ விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1.5 லட்சம் பேர் பாதித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். கமல் ராணி வருன் என்ற அந்த 62 வயது அமைச்சர் லக்னோ சஞ்சய் காந்தி மருத்துக்கல்லூரியில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
மேலும், மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சரவை சந்திப்பு மேற்கொண்ட உள்துறை அமித் ஷாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மற்றும் அவரது அமைச்சரவை சேர்ந்த 3 அமைச்சர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் 9 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசு ஆக.14ம் தேதி வரை அரசியல் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது.