பெங்களூருவில் முழு முடக்கம் அமல்படுத்தப்படமாட்டாது. மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென எடியூரப்பா வேண்டுகோள்
ஹைலைட்ஸ்
- தொற்றுநோயை தடுக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்
- தொற்றை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன்
- அனைத்துக்கட்சிக்கூட்டத்திற்கு அழைப்பு
Bengaluru: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.73 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10 ஆயிரத்தினை கடந்துள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் மக்கள், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த தேவையில்லையென மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
"கோவிட் தொற்றுநோய் அதிகரித்து வருகிறது, அதனை கட்டுப்படுத்த நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம், சில பகுதிகளுக்கு கூட சீல் வைத்துள்ளோம். இன்று பிற்பகல் கிருஷ்ணாவில் (முதல்வரின் வீட்டு அலுவலகம்) நான் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு கலந்தாலோசனையை மேற்கொண்டேன், மேலும் COVID ஐ கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தேன்.“ என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நாளை நண்பகல் பெங்களூருவைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைச்சர்கள் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.“ என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக, தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பதை மேற்கோள் காட்டி, சுகாதார அமைச்சர் பி.ஸ்ரீராமுலு, இதே நிலைமை தொடர்ந்தால் நகரத்தில் ஊரடங்கை அமலாக்க அரசாங்கம் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பல்வேறு வதந்திகளை உருவாக்கியது. இதனை தொடர்ந்து “நகரத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாக்கப்படுவது குறித்து எந்தவொரு முடிவும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே எடுக்கப்படும்.“ என மாநில அமைச்சர்கள் தெளிவுப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநில முதல்வர் முழு ஊரடங்கு இல்லையென தெளிவுப்படுத்தியுள்ளார். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.
தொற்று மேலும் பரவுவதை தடுக்க நகரத்தின் பிஸியான கே ஆர் சந்தை மற்றும் கலாசிபல்யா சந்தை ஆகியவற்றை 15 நாட்களுக்கு மூடி சீல் வைத்துள்ளது பெங்களூரு மகாநகரட்சி நிர்வாகம் (BBMP).
“நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடும்போது நாங்கள் இன்னும் கட்டுப்பாட்டினை இழக்கவில்லை.“ என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெங்களூரு நாட்டின் பல நகரங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இன்று முதல், மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முழு சுகாதார பாதுகாப்புடன் தொடங்கியது. எஸ்.எஸ்.எல்.சி (10 ஆம் வகுப்பு) தேர்வுகளை இன்று முதல் பாதுகாப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்துள்ளது என்றும், மாணவர்கள் வெளியே வந்து அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக தேர்வுகள் எழுத வேண்டும் என்றும் எடியூரப்பா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.