ஹைலைட்ஸ்
- தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா!
- ஒட்டு மொத்த பாதிப்பு 1,86,492 ஆக அதிகரித்துள்ளது
- மார்ச் 1 முதல் ஜீன் 10 வரை விடுபட்ட மரணங்கள் எண்ணிக்கை 444
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்யைானது 1.86 லட்சத்தினை கடந்துள்ளது. இன்று பரிசோதனை செய்யப்பட்ட 58,475 நபர்களில் 5,849 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும். இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 4,910 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று 74 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 2,700 ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவர் வடிவேல் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் விடுபட்ட கொரோனா உயிரிழப்பு குறித்த அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளனர். இதில் மார்ச் 1 முதல் ஜீன் 10 வரை விடுபட்ட மரணங்கள் எண்ணிக்கை 444 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையை பொறுத்த அளவில் 19வது நாளாக 2,000க்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,849 பேரில் 1,171 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 89,561 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 1,939 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர்.