This Article is From Mar 23, 2020

கொரோனா வைரஸ்: 80க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் மார்ச்.31 வரை ஊரடங்கு!

Coronavirus: நாடு முழுவதும் ரயில்கள், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில், மார்க்கெட்டுகள், மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவை ஏற்கனவே மூடப்பட்டுள்ளன.

Coronavirus: டெல்லியில் எல்லைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. (File)

ஹைலைட்ஸ்

  • 80 முக்கிய நகரங்களை மார்ச்.31ம் தேதி வரை முடக்கம்
  • டெல்லியில் எல்லைகளுக்கு சீல் வைப்பு
  • இந்தியாவில் 370க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
New Delhi:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 80 முக்கிய நகரங்களை மார்ச்.31ம் தேதி வரை முற்றிலும் முடக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், மேற்கு வங்கம், சண்டிகர், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, புதுச்சேரி மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச்.31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ரயில்கள், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில், மார்க்கெட்டுகள், மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மேலும், பல மாநிலங்கள் 5 பேருக்கு மேல் கூடுவதை தடைசெய்யும் சட்டமான 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது. 

முன்னதாக நேற்று காலை அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடன் அமைச்சரவை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னரே முடக்கப்படும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

டெல்லியில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணி முதல் மார்ச் 31.ம் தேதி வரை டெல்லியில் எல்லைகளுக்கு சீல் வைக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லிக்கு வெளியேயும் அனைத்து விமானங்களும் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். 

இந்த முடக்கத்தின் போது, ​​எந்த வாகனங்களும், டாக்சிகளும், ஆட்டோ ரிக்‌ஷாக்களும் தேசிய தலைநகரில் இயங்க அனுமதிக்கப்படாது. தனியார் வாகனங்களும் தடை பொருந்தும். காவல் துறை, சுகாதாரம், தீயணைப்பு, சிறைச்சாலைகள், மின்சாரம், நீர், பெட்ரோல் பங்குகள் உட்பட 24 அத்தியாவசிய சேவைகளின் பணியாளர்களுடன் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும்.

மளிகைப் பொருட்கள், உணவு, பால், மீன், இறைச்சி மற்றும் காய்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. 

மார்ச் 31 ஆம் தேதி வரை அனைவரும் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது மற்றும் தனியார் போக்குவரத்து தடைசெய்யப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு நேரில் வந்து வழங்கப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மேலும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 370 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் மூன்று உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 13,049 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3.7 லட்சம் பேருக்கு பாதிப்பு உள்ளது. 

முடக்கப்பட்ட நகரங்களின் பட்டியல் இங்கே:

ஆந்திர பிரதேசம் - பிரகாசம், விஜயவாடா, விசாக்
சண்டிகர்- சண்டிகர்
சத்தீஸ்கர்- ராய்ப்பூர்

டெல்லி- மத்திய கிழக்கு
டெல்லி வடக்கு
மேற்கு டெல்லி
வடகிழக்கு டெல்லி
தெற்கு டெல்லி

குஜராத்- கட்ச்
ராஜ்கோட்
காந்திநகர்
சூரத்
வதோதரா
அகமதாபாத்

ஹரியானா- ஃபரிதாபாத்
சோனிபட்
பஞ்ச்குலா
பானிபட்
குருகிராம்

இமாச்சலப் பிரதேசம்- காங்கரா

ஜம்மு-காஷ்மீர்- ஸ்ரீநகர்
ஜம்மு

கர்நாடகா- பெங்களூர்
சிக்கபல்லபுரா
மைசூர்
கோடகு
கலாபுராகி

கேரளா-ஆலப்புழா
எர்ணாகுளம்
இடுக்கி
கண்ணூர்
காசர்கோடு
கோட்டயம்
மல்லாபுரம்
பதனம்திட்டா
திருவந்தபுரம்
திருச்சூர்

லடாக்- கார்கில்
லே

மத்தியப் பிரதேசம்- ஜபல்பூர்

மகாராஷ்டிரா- அகமதுநகர்
அவுரங்காபாத்
மும்பை
நாக்பூர்
மும்பை 
புனே
ரத்னகிரி
ராய்காட்
தானே
யவத்மல்

ஒடிசா- குர்தா

புதுச்சேரி- மாகே

பஞ்சாப்- ஹோஷியார்பூர்
எஸ்.ஏ.எஸ் நகர்
எஸ்.பி.எஸ் நகர்

ராஜஸ்தான்- பில்வாரா
ஜுன்ஜுனு
சிகார்
ஜெய்ப்பூர்

தமிழ்நாடு-சென்னை
ஈரோடு
காஞ்சிபுரம்

தெலுங்கானா- பத்ராத்ரி
கோதகுடம்
ஹைதராபாத்
மேட்சாய்
ரங்கா ரெட்டி
சங்க ரெட்டி

உத்தரபிரதேசம்-ஆக்ரா
ஜி.பி.நகர்
காசியாபாத்
வாரணாசி
லக்கிம்பூர் கெரி
லக்னோ

உத்தரகண்ட்- டேராடூன்

மேற்கு வங்கம் - கொல்கத்தா
வடக்கு 24 பர்கானாக்கள்

.