உலக அளவில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் 20,000 பேர் இறந்துள்ளதாகவும், உலக சுகாதார அமைப்புத் தகவல் தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனாவை எதிர்கொள்ள நிதி அமைச்சர் சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார்
- ஆர்பிஐ ஆளுநர், ரெப்போ ரேட் விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளார்
- நாட்டில், இதுவரை 19 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்
New Delhi: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 149 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாக உள்ளது. இதுவரை 834 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள மருந்தை உருவாக்க 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அது, “அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும்,” என்றும் வலியுறுத்தியுள்ளது. கொரோனாவால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை மீட்டெடுக்க அதிக நிதி தேவைப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியமான, ஐ.எம்.எஃப்-ன் தலைவர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா கூறியுள்ளார்.
இது குறித்த முக்கிய 10 தகவல்கள்:
1.பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த '21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு' அமலுக்கு வந்து 4 நாட்கள் ஆகியுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் பிற மாநில ஊழியர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இப்படி, கூட்டம் கூட்டமாக மக்கள் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.
2.இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், சக்திகாந்த தாஸ், நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பல்வேறு பொருளாதார நிவாரணத் திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அவர், நிதி சார்ந்த துறைகள் கடும் அழுத்தத்தில் இருப்பதாகவும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை மூலமே பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்தார்.
3.அவர், ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில், 75 புள்ளிகளை குறைப்பதாக அதிவித்தார். அதனால் ரெப்போ ரேட் விகிதம், 4.4 சதவிகிதமாக குறைந்துள்ளது. ரெப்போ ரேட் விகிதத்தின் அடிப்படையில்தான் ஆர்பிஐ, மற்ற வங்கிகளுக்குக் கடன் அளிக்கும்.
4.ஆர்பிஐ ஆளுநர் செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர், கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க, ஏழை, எளிய மக்களுக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். “கொரோனாவால் நாம் போராடி வரும் காலக்கட்டத்தில் யாரும் பட்டினியுடன் இருக்க வேண்டாம். ஏழைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு, 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும்,” என்று கூறினார் அமைச்சர் நிர்மலா.
5.கொரோனா பவரலைத் தடுக்கும் வகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவைகளை, ஏப்ரல் 14 ஆம் தேதி ரத்து செய்தவதாக டிஜிசிஏ அறிவித்துள்ளது. முன்னதாக, மார்ச் 31 ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது, ரத்து காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
6.விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், ஊரடங்கு காலத்தின் போது மனிதாபிமான அடிப்படையில் அரசுக்கு விமான சேவை தர தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி மற்றும் மும்பையிலிருந்து பாட்னாவுக்கு விமான சேவையை அளித்து, பிகார் மாநில ஊழியர்களுக்கு உதவவும் முன் வந்துள்ளது ஸ்பைஸ் ஜெட்.
7.ஊரடங்கு உத்தரவால் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், பிக் பாஸ்கெட் உள்ளிட்ட மளிகைக் கடை நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தங்கள் மாநில குடிமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்று மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
8.உலக அளவில் 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் 20,000 பேர் இறந்துள்ளதாகவும், உலக சுகாதார அமைப்புத் தகவல் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
9.அமெரிக்காவில் தற்போது 1,00,000 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், நியூயார்க்கில்தான் அதிக பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
10.சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பித்தது. சீனாவில் தற்போது வைரஸ் கட்டுக்குள் இருக்கும் நிலையில் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக 1,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.