This Article is From Apr 07, 2020

சீனாவில் கொரோனாவின் புதிய அலை… திடீரென்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

COVID-19: இதுவரை சீனாவில் மொத்தமாக, 81,708 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீனாவில் கொரோனாவின் புதிய அலை… திடீரென்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும், சீனாவில் 78 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • புதிதாக 951 பேருக்கு சீனாவில் கொரோனா பாதிப்பு
  • தற்போதைக்குச் சீனாவில் வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது
  • சீனர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்
Beiijing:

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்துள்ள காரணத்தினால் வெளிநாடுகளில் தங்கியிருந்த சீனர்கள், தங்கள் நாட்டிற்குத் திரும்பி வருகிறார்கள். அவர்கள் கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படியிருந்தும், வருபவர்களில் நிறைய பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அப்படி இதுவரை, 951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் சீனத் தலைநகரம் பீஜிங்கின் சுகாதாரத் துறை, நகரத்தில் வெகு நாட்களுக்கு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடரும் என்று எச்சரித்துள்ளது. பல நாடுகளிலிருந்து பீஜிங் நகரத்துக்குத்தான் பலர் வருவது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து சீன சுகாதார கமிஷனின் செய்தித் தொடர்பாளர், மீ ஃபெங், “கோவிட்-19 பரவலால் வேறு நாடுகளில் தவித்து வரும் சீனர்களை நாங்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருகிறோம். இந்நிலையில், அப்படி வந்தவர்களில் 951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சீனாவின் அண்டை நாடுகளிலிருந்து திரும்புபவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக உள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

தற்போதைக்குச் சீனா, தங்கள் நாட்டிற்குள் மற்ற நாட்டவர்களை அனுமதிப்பதற்குத் தடை விதித்துள்ளது. வெளிநாடு வாழ் சீனர்கள் மட்டுமே தற்சமயம் அனுமதிக்கப்படுகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில், சீனாவில் புதியதாக 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 38 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இதனால், கொரோனா தொற்றின் இரண்டாம் அலைப் பரவத் தொடங்கிவிடுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும், சீனாவில் 78 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 40 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். மொத்தமாக அங்கு 1,047 பேருக்கு கொரோனாவுக்கான அறிகுறி இல்லாமல் நோய் தொற்றோடு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, ஞாயிற்றுக் கிழமை, ஹூபே மாகாணத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,331 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை சீனாவில் மொத்தமாக, 81,708 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 77,078 பேர் குணமடைந்துள்ளனர். 1,299 பேர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர் என்று சீன சுகாதார கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.

.