This Article is From Apr 03, 2020

ஊரடங்கால் நாக்பூரிலிருந்து 500 கி.மீ. நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு!!

நாட்டின் பல மாநிலங்களில் கூலித்தொழிலாளர்களாக பல்வேறு மாநிலத்தவர் பணியாற்றி வருகின்றனர். 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் உணவின்றி தவிக்கும் அவர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

ஊரடங்கால் நாக்பூரிலிருந்து 500 கி.மீ. நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு!!

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழக தொழிலாளிகள் நடைபயணம்
  • 500 கி.மீ. கடந்த நிலையில் செகந்திராபாத்தில் தொழிலாளி லோகேஷ் உயிரிழப்பு
  • லோகேஷின் சடலம் சொந்த ஊரான நாமக்கல்லுக்கு கொண்டு செல்லப்படுகிறது
Hyderabad:

ஊரடங்கால் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைப்பயணமாகக் கிளம்பிய தொழிலாளி, தெலங்கானாவின் செகந்திராபாத்தில் உயிரிழந்துள்ளார்.

23 வயதாகும் லோகேஷ் பாலசுப்ரமணி என்ற அந்த தொழிலாளி நாக்பூரில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தை நடைப்பயணமாகக் கடந்துள்ளார்.

நாட்டின் பல மாநிலங்களில் கூலித்தொழிலாளர்களாக பல்வேறு மாநிலத்தவர் பணியாற்றி வருகின்றனர். 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் உணவின்றி தவிக்கும் அவர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சிலர் மகாராஷ்டிர மாநிலத்தில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 26 பேர் ஒரு குழுவாக தமிழகத்திற்கு நடைபயணமாக புறப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் செகந்திராபாத் வழியே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, நாமக்கல்லைச் சேர்ந்த லோகேஷ் சுப்ரமணி என்ற தொழிலாளி உயிரிழந்தார். உயிரிழந்த லோகேஷ் சுப்ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

06jm9uj8

லோகேஷ் உயிரிழந்த இடத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள்.

முன்னதாக தொழிலாளர் குழுவினர் போவன்பள்ளி சந்தையில் நின்றுள்ளனர். அவர்களை உள்ளூர் பிரமுகர்கள் மேற்கு மாரட்பள்ளியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே 176 பேர் இருந்தனர்.

இந்த நிலையில், அங்கிருந்த லோகேசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் வருவதற்குள்ளாக லோகேஷின் உயிர் பிரிந்துள்ளது.

நடைப்பயணம் குறித்து, தொழிலாளர் குழுவில் உள்ள சத்யா என்பவர் கூறியதாவது-

நாங்கள் கடந்த 3 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறோம். போக்குவரத்து வசதி ஏதும் கிடையாது. செல்லும் வழியில் சிலர் எங்களுக்கு உணவு அளிப்பார்கள். சிலர் எங்களை கொஞ்ச தூரம் அவர்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள். எங்களுக்கு உதவி செய்த வாகன ஓட்டுநர்களை போலீசார் அடித்துள்ளனர்.

சமூக விலகல் அவசியம் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லாமல் இப்படி கிளம்பி வந்து விட்டோம். எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லாவிட்டால், குழுவாக இருக்கும் எங்களுக்கு வராத கொரோனாவும் வந்து விடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 3 நாட்களாக நாக்பூர் – தெலங்கானா இடையே 38 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியுள்ளது. நடைப்பயணமாக வந்தவர்கள் அனைவரும் குறைந்தது ஒரு பையை சுமந்து வந்துள்ளனர்.

உயிரிழந்த லோகேஷின் உடல் ஐதராபாத்திலேயே தகனம் செய்யப்படவிருந்தது. பின்னர், உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டதில், லோகேஷின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

.