This Article is From Apr 28, 2020

செப்டம்பருக்குள் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படலாம்: நம்பிக்கை தரும் இந்திய நிறுவனம்!

Coronavirus: கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2,09,661 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

Coronavirus: சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம், அதற்கு எதிராக தடுப்பூசியைக் கண்டுபிடிக்க இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 

ஹைலைட்ஸ்

  • சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இது குறித்த தகவலை தந்துள்ளது
  • சீரம் நிறுவனத்தின் அடர் பூனாவாலா, இது குறித்து NDTV-யிடம் பேசியுள்ளார்
  • ஆக்ஸ்ஃபர்டு பல்கலையுடன் இணைந்து சீரம் நிறுவனம் பணியாற்றி வருகிறது
New Delhi:

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி (Vaccine) கண்டுபிடிக்கப்படலாம் என்று உலகின் மிகப் பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் NDTV-யிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்படி கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசியின் விலை சுமார் 1,000 ரூபாய் இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 

இது குறித்து, சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர், அடர் பூனாவாலா, “நாங்கள் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறோம். இப்போது நாங்கள் சோதித்து வரும் மாதிரிகள் செப்டம்பர் மாதத்திற்குள்ளோ அல்லது அக்டோபர் மாதத்திற்குள்ளோ வெற்றிகரமான முடிவைத் தருமேயானால்… அதை உடனடியாக இந்தியாவுக்கும் உலகத்திற்கும் கொடுத்து விடுவோம்,” என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகளவில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 2,09,661 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம், அதற்கு எதிராக தடுப்பூசியைக் கண்டுபிடிக்க இங்கிலாந்து மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. 

உலகின் பல விஞ்ஞானிகளும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க இரண்டு ஆண்டுகளோ அல்லது குறைந்தபட்சம் 18 மாதங்களோ ஆகலாம் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பூனாவாலா, இன்னும் ஒரு சில மாதங்களில் தடுப்பூசி தயாராகிவிடும் என்கிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, “நாங்களுமே 2021 ஆம் ஆண்டுதான் தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரிக்க முடியும் என்று சொல்லி வந்தோம். ஆனால், ஒரு வாரத்துக்கு முன்னர் நாங்கள் ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் போட்டு பணியாற்றத் தொடங்கினோம். அவர்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர். தற்போது அவர்கள் மனிதர்களிடம் தடுப்பூசிச் சோதனையை செய்து வருகிறார்கள்,” என்று விளக்கம் கொடுத்தார். 

ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகம், மனிதர்களிடம் தங்களின் சோதனையை கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஆரம்பித்தது. உலகளவில் கிட்டத்தட்ட 100 குழுக்கள், கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்க தொடர்ந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஆக்ஸ்ஃபர்டு பல்கலைக்கழகத்தைத் தவிர சுமார் 7 இடங்களிலும் கொரோனா வைரஸின் கிளினிக்கல் டிரையல் செய்யப்பட்டு வருவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. 

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் விலை குறித்து பூனாவாலா கூறும்போது, “இந்த சமயத்தில் அது குறித்து சொல்வது சரியாக இருக்காது. ஆனால், சுமார் 1,000 ரூபாய் இருக்க வாய்ப்புள்ளது.

எனக்கு ஆக்ஸ்ஃபர்டு குழு மீது நம்பிக்கை உள்ளது. அவர்கள் ஈபோலா வைரஸுக்கும் விரைவாக தடுப்பூசியைக் கண்டுபிடித்தார்கள்.” என்கிறார். 

ஆக்ஃஸ்பர்டு பல்கலைக்கழக குழுவைத் தவிர்த்து பூனாவாலாவின் சீரம் நிறுவனம், அமெரிக்காவின் Codagenix உடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது. Codagenix-ம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிப்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. தற்போது அந்நிறுவனம், தடுப்பூசியை மிருகங்களின் மீது சோதனை செய்து வருகிறது. “ஆக்ஸ்ஃபர்டு ஆய்விலிருந்து சுமார் 2 மாதங்கள் பின் தங்கியுள்ளது இந்த ஆய்வு,” என்கிறார் பூனாவாலா. 
 

.