அடுத்த 24 மணி நேரத்தில் மட்டும் மேற்கு வங்கத்திற்கு 36 சிறப்பு ரயில்கள் வர உள்ளன.
ஹைலைட்ஸ்
- மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது
- கொரோனா பரவலைத் தொடர்ந்து அமித்ஷாவுக்கும் மம்தாவுக்கும் மோதல் வெடித்தது
- இருவரும் தொடர்ந்து பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்கள்
Kolkata: மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் பெரும் பிரச்னையாக மாறி வரும் நிலையில், மாநிலத்தை ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து பல்வேறு விஷயங்களில் மோதல் போக்கு நிலவி வருகிறது. கொரோனா பிரச்னை மேற்கு வங்க அரசு சரியாக கையாளவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டினால், அதைவிட அதிக குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மீது அடுக்கிறது மேற்கு வங்க அரசு தரப்பு. இப்படி பல்வேறு விஷயங்களில் இரு அரசுகளுக்கும் முரண்பாடுகள் நிலவி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தான் பேசியது குறித்து வெளிப்படையாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.
கொல்கத்தாவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மம்தா, “நான் அமித்ஷாவிடம் நீங்கள் மேற்கு வங்கத்திற்குத் தொடர்ந்து மத்திய குழுக்களை அனுப்பி வருகிறீர்கள். என் தலைமையிலான அரசு கொரோனா பிரச்னையை சமாளிக்க முடியாது என்று நினைத்தால் நீங்களே முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள் என சொன்னேன்,” என்று இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக பேசினார்.
தொடர்ந்து அவர், “அவர் அதற்கு அளித்த பதிலைப் பாராட்டுகிறேன். ‘ஒரு தேர்ந்தெடுத்த அரசை மீறி அப்படியெல்லாம் எங்களால் செயல்பட முடியாது' என்றார்,” எனக் கூறினார்.
மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததிலிருந்து மம்தாவுக்கும் அமித்ஷாவுக்கும் வார்த்தைப் போர் நடந்து வருகிறது. அதேபோல, உள்துறை அமைச்சகத்தின் செயலாளரும், மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளரும் கடிதங்கள் மூலம் ஒருவரைப் பற்றி மற்றொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அமித்ஷா, மம்தாவுக்கு அனுப்பிய ஒரு கடிதம், அவரை சென்றடையும் முன்னர் பொது வெளியில் கசிந்தது.
அது குறித்து உஷ்ணமாக பேசிய மம்தா, “நான் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்களை பற்றியெல்லாம் வெளியில் சொல்ல மாட்டேன். ஆனால் நிலைமை அப்படி உள்ளது. பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் நான் ஒன்றைத்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொரோனா பரவல் மேலும் அதிகரிக்காமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். பிகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது,” என்றார்.
தற்போது மேற்கு வங்க அரசுக்கு அடுத்தப் பிரச்னையாக வந்துள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சிறப்பு ரயில்களின் வருகை. அடுத்த 24 மணி நேரத்தில் மட்டும் மேற்கு வங்கத்திற்கு 36 சிறப்பு ரயில்கள் வர உள்ளன. பெரும்பாலும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து ரயில்கள் வர உள்ளன. இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்துப் பேசிய மம்தா, “ஒரு பக்கம் கொரோனாவுக்கு எதிராக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கம் அம்பான் புயல் பாதிப்புகளுக்கு எதிராக போராடி வருகிறோம். இந்த நேரத்தில் பெரும் அளவிலான சிறப்பு ரயில்களை அனுப்பி வைக்கின்றார்கள். மாநில அரசிடம் இது குறித்து விவாதித்தப் பின்னர்தான் அவர்கள் சிறப்பு ரயில்களை இயக்கி இருக்க வேண்டும். ஏன் அவர்கள் எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. என்னை அரசியல் ரீதியாக நிலைகுலையச் செய்யவே இப்படி ரயில்களை அனுப்பி வைக்கிறார்கள். என்னைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு அவர்கள் மேற்கு வங்கத்தைத்தான் தாக்குகிறார்கள்,” எனப் பொங்கியுள்ளார்.
அதே நேரத்தில் மேற்கு வங்க பாஜக தரப்பு, ‘புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விஷயத்தை பொறுப்பாக கையாளாமல் அதிலிருந்து தப்பிக்கவே பார்க்கிறார் மம்தா' என குற்றம் சாட்டியுள்ளது.