சர்வதேச அளவில் கொரோனா 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 86 பேர் இதுவரை இந்த தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்து வருகின்றது. ஒட்டுமொத்த தேசிய அளவில் தமிழகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்ததுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையானது 485ஆக உள்ளது.
நேற்று வரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 75 வயது முதியவர் கடந்த 2-ம் தேதி உயிரிழந்தார். அவரின் கொரோனா பரிசோதனை முடிவு தற்போது தெரியவந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக அதிகரித்தது என தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 60 வயது ஆண் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நபரோடு சேர்த்து தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.