Read in English বাংলায় পড়ুন
This Article is From Apr 29, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,000ஆக உயர்வு; பலி எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது!

Coronavirus India: பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா பாதிப்பு குணம் அடையும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1,007 பேர் உயிரிழந்துள்ளனர்
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,000ஆக உயர்வு
  • நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 73 பேர் உயிரிழந்துள்ளனர்
New Delhi :

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 1,007 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிப்பு எண்ணிக்கையானது 31,332 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 73 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாதிப்பு எண்ணிக்கையும் கடந்த 10 நாட்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா பாதிப்பு குணம் அடையும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  தற்போது, கொரோனா பாதிப்புக்கு பல்வேறு மருத்துவர்கள் பிளாஸ்மா முறையை கடைப்பிடிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் சோதனை முயற்சியாக இந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது முழு வெற்றி அடைந்தால்தான், பிளாஸ்மா சிகிச்சையை பரவலாக்க அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கும்.

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பட்டாலியனில் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாம் காணப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1,000 பேர் கொண்ட முழு பட்டாலியனும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

நாட்டிலே அதிகம் பாதிப்பு கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 729 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 9,318ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நேற்று ஒரேநாளில் அதிகபட்சமாக 31 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக அம்மாநிலத்தில் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 1.55 லட்சம் பேர் அந்த மாநிலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 1,388 பேர் குணமடைந்துள்ளனர். மும்பையில் மட்டும் 6,000 பேர் பாதிப்படைந்துள்ளனர். 

வடகிழக்கு பகுதியில் கொரோனா பாதிப்பு இல்லாத 5வது மாநிலமாக திரிபுராவும் உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அவர்களும் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Advertisement

தமிழகத்தில் 5 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 2 நகரங்களில் நேற்றிரவுடன் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டது. தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2,000ஐ தாண்டியுள்ளது. இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாடு முழுவதும், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்ட 7,696 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி, மீட்பு விகிதம் 24.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

Advertisement

தற்போது, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வார்டுகளில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், லேசான கொரோனா அறிகுறி கொண்டவர்கள், தங்களை தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளும் வசதிகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்திக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Advertisement