This Article is From Jun 21, 2020

தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை! முதல்வர் தலையிட மதுரை எம்.பி கோரிக்கை!

கொரோனா தொற்றினைப்பற்றிய முழுவிபர அறிக்கையை கடந்த சூன் 7ஆம் தேதி வெளியிட்ட தமிழக அரசு, அதன்பின் நேற்று (20-6-20) மீண்டும் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், தினமும் பதிவாகும் கொரோனா எண்ணிக்கையில் ஏறத்தாழ சரிபாதி இதர மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தென்மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், எனவே முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

கொரோனா தொற்றினைப்பற்றிய முழுவிபர அறிக்கையை கடந்த சூன் 7ஆம் தேதி வெளியிட்ட தமிழக அரசு, அதன்பின் நேற்று (20-6-20) மீண்டும் வெளியிட்டுள்ளது.

அதன்படி காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன.

Advertisement

இதில் காஞ்சிபுரம், சென்னையை மண்டலமாக இருப்பதால் அதற்கான சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பொழுது ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் இரு மடங்கு அதிகமாகியுள்ளன. சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இம்மாவட்டங்களில் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கலாம். ஆனால் தொற்றும் மரணமும் இரு மடங்கு அதிகமாகியுள்ளதை அபாய எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் தொற்று உறுதிசெய்யப்பட்டதிலிருந்து 92நாள்களில் ஏற்பட்ட பாதிப்பு இந்த 13 நாள்களில் ஏற்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 31-5-20ஆம் நாள் தமிழக அரசு வெளியிட்ட ஆணையில், சென்னை மண்டலத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு வருகிறவர்களைக் கட்டாயம் கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் இந்த ஆணையை மாவட்ட நிர்வாகங்கள் பின்பற்றவில்லை. தொடர்ந்து இதுகுறித்து அறிக்கையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்ட பின்னர் கடந்த நான்கு ஐந்து நாள்களாகத்தான் மாவட்ட நிர்வாகங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டன. அதற்குள் முறையான அனுமதி பெற்றும் அனுமதி பெறாமலும் பெரும் எண்ணிக்கையில் சென்னையிலிருந்து மக்கள் சொந்த மாவட்டங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இவர்களைக் கண்டறிந்து சோதனையை மேற்கொள்ளும் பணியை மிகவிரைவாகச் செய்யவேண்டியுள்ளது.

Advertisement

காய்கறி மற்றும் அனைத்துவகையான வணிக சந்தை, ரயில் நிலையம், விமான நிலையம் என மதுரையை மையப்படுத்தியே சுற்றியுள்ள மாவட்டங்கள் இயங்குகின்றன. அதனாலேயே மதுரைக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இவற்றைப் புரிந்து கொண்டு

மதுரையை மையப்படுத்தி தென்மாவட்டங்களுக்கான தனித்த திட்டமிடலும் அணுகுமுறையும் தேவை.

Advertisement

அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா நோய் தொற்றின் வேகம் தென்மாவட்டங்களில் மிகத்தீவிரமடைய வாய்ப்புள்ளது.

எனவே தென்மாவட்டங்களுக்கான சிறப்பு அதிகாரியாக செயல்திறன் படைத்த ஒருவரை உடனடியாக நியமியுங்கள். மாவட்டங்களின் நிலைமைக்கு ஏற்ப தனித்த ஏற்பாடுகளும் அதே நேரத்தில் தென்மாவட்டங்கள் முழுமைக்குமான சில பொதுவான திட்டங்களும் வகுக்கப்படவில்லையெனில் கடும்பாதிப்பினைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

Advertisement

முறையான நிர்வாக ஏற்பாட்டினை உறுதிப்படுத்தினால்தான் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட ஆறு மாவட்டங்களிலும் கொரொனா தொற்றின் பாதிப்பினைக் கட்டுப்படுத்த முடியும். நிலைமை இன்னும் கைமீறிப்போய்விடவில்லை. ஆனால் வரும் வாரத்தைத் தவறவிட்டால், கடைசி வாய்ப்பினைத் தவறவிடுவதாகவே பொருள்.

எனவே இது குறித்து மாநில முதலமைச்சர் உடனடியாக முடிவெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். என வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளர்.

Advertisement