அதிகபட்சம் 6 சதவீதம் வரைதான் இந்த கருவிகள் துல்லியத் தன்மை கொண்டவை என விமர்சனங்கள் எழுந்தன
ஹைலைட்ஸ்
- சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டன
- கருவிகள், பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன
- கருவிகளில், சோதனை முடிவுகள் சரியாக வரவில்லை என்று புகார் எழுந்தது
New Delhi: சீனாவின் இரண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை, கொரோனா வைரஸ் சோதனைக்காக பயன்படுத்தப் போவதில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து சீன அரசு தரப்பு, இந்த முடிவால் வருத்தமடைந்துள்ளோம் என்றும், இதற்கு ஏதுவான முடிவு இந்திய அரசால் எடுக்கப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை விரைந்து கண்டறிவதற்காக சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் லட்சக்கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டன. இவை தமிழகம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. தமிழகமும் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவிலிருந்து ஆர்டர் செய்திருந்தது.
இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தரம் அற்றவையாக உள்ளதென ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் ஆதாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டன. அதிகபட்சம் 6 சதவீதம் வரைதான் இந்த கருவிகள் துல்லியத் தன்மை கொண்டவை என விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மத்திய அரசு மீதான அழுத்தம் அதிகரித்தது.
இந்த நிலையில், சின நிறுவனங்களான குவாங்சு ஒன்போ பயோடெக் மற்றும் ஜுஹாயின் லிவ்சோன் டயனோஸ்டிக்ஸ் ஆகிய 2 நிறுவனங்களிடம் வாங்கப்பட்ட கருவிகள் தரமற்றவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்களிடம் ஆர்டர் செய்யப்பட்ட கருவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வகையில் இந்தியாவுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதற்கு சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜி ராங், “சோதனைக் கருவிகள் குறித்து வந்த முடிவுகளும், அதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எடுத்துள்ள முடிவும் வருத்தமளிக்கின்றன. சீனா, தான் ஏற்றுமதி செய்யும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மொத்த சீனப் பொருட்களும் தரமற்றவை என்று சிலர் முத்திரைக் குத்தி வருகிறார்கள். அது பொறுப்பற்ற விளக்கமாக உள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு சீனா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்,” என்று கூறியுள்ளார்.
(With inputs from PTI)