அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஊடகங்களுக்கு உரையாற்றினார்.
New Delhi: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியில்,2,625 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் வணிக வளாகங்கள் மற்றும், சந்தைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்றும்,குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள கடைகள் மட்டும் தனித்தனியே திறந்திருக்கும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
“கொரோனா தொற்று இல்லாத பகுதிகளில் தளர்வுகளை அனுமதிக்கலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்ததையடுத்து டெல்லியில் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் என நாங்கள் முடிவெடுத்துள்ளோம். மத்திய அரசின் அறிவிப்பு வந்து ஒரு வாரம் நிறைவடையக்கூடிய நிலையில் நாளை (27 ஏப்ரல்) நிலைமையை மறு பரிசீலனை செய்து முடிவெடுப்போம்” என கெஜ்ரிவால் தற்போது தெரிவித்திருக்கிறார்.
தற்போது டெல்லி அரசு மத்திய அரசின் சமீபத்திய வழிகாட்டுதல்களுடன் இணைந்துள்ளது. சந்தைகள், வணிக வளாகங்கள் என எதுவும் தற்போது மீண்டும் திறக்கப்படாது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்படும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள அண்டைக் கடைகள் மட்டுமே திறக்கப்படும். இந்த கட்டுப்பாடுகள் மே 3 வரை அதாவது இரண்டாவது முழு முடக்கம் (LOCKDOWN) நடவடிக்கை காலகட்டம் வரை தொடரும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தற்போது டெல்லி 95 கட்டுப்பாட்டு மண்டலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மத்திய அரசு வணிக வளாகங்கள் தவிர குடியிருப்பு அருகாமையில் உள்ள கடைகளைத் திறக்கலாம் என அறிவுறுத்தியிருந்தது. இந்த தளர்வானது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு பொருந்தாது என்றும் அறிவித்திருந்தது.