New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு முடக்க நடவடிக்கை (LOCKDOWN) மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே மோசமான நிலையிலிருந்த நாட்டின் பொருளாதாரம், இந்த முழு முடக்க நடவடிக்கை காலகட்டங்களில் மேலும் பலமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை மீட்டெடுக்க மத்திய அரசு ஏப்ரல் 20க்கு பிறகு சில தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் டெல்லியில் எவ்வித தளர்வுகளும் அனுமதிக்கப்படமாட்டாது என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தற்போது தெரிவித்திருக்கிறார்.
ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 சதவிகிதம் மக்கள் தேசிய தலைநகரான டெல்லியில் வசிக்கின்றனர். தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவிகித்தினர் டெல்லியில் உள்ளனர் என கெஜ்ரிவால் இன்று மத்தியம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்கு பிறகு நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கொரோனா தொற்று ஏற்படாத மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும், ஆனால் டெல்லி 11 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த மாவட்டங்கள் அனைத்தும் தொற்று பரவலுக்கான மையமாக(hotspots) உள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தலைநகரான டெல்லியில் 1,893 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.