டெல்லியில் குறைந்த அளவிலே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்; சுகாதார அமைச்சர் கருத்து!
ஹைலைட்ஸ்
- டெல்லியில் குறைந்த அளவிலே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்;
- கெஜ்ரிவால் கருத்துக்கு மாறாக சுகாதார அமைச்சர் கருத்து!
- டெல்லியில் குறைந்த அளவிலே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்
New Delhi: டெல்லியில் குறைந்த அளவிலே கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நகரில் கடுமையான நடவடிக்கை தேவை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், இது தனது சொந்த கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, இந்த விவகாரம் குறித்து நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. அது, அரசியல் கருத்தாக எடுத்துக்கொள்ளப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநிலங்களில் டெல்லியும் ஒன்றாகும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என்று அவர் கூறினார்.
குறைந்த அளவிலே கட்டப்பாடு தளர்வுகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். உள்துறை அமைச்சகமானது விரிவான நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பை பொறுத்து ஒவ்வொரு மாநிலமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் தற்போது வரை 4,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 427 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மார்ச்.25ம் தேதி முதல் மூடப்பட்ட மதுக்கடைகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், மக்கள் சமூகவிலகை கடைபிடிக்காததால் போலீசார் துணையுடன் விற்பனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளிலும் மதுக்கடைகளுக்கு வெளியே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பல இடங்களில் கடைகள் மீண்டும் மூடப்பட்டன.
முன்னதாக, நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, டெல்லியில் ஊரடங்கை தளர்த்தப்போவதாக அறிவித்திருந்தார். டெல்லியில் இயல்பு நிலை திரும்ப இருக்கிறது. கோரோனா தொற்றுடன் வாழ நாம் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்போது கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ள பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என்றார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்ட பின்பு மீண்டும் ஏதேனும் தொற்று பரவல் கண்டறியப்படுமாயின் அதை சமாளிக்க டெல்லி அரசு தயாராக உள்ளது. தனியார் அலுவலகங்கள் 33 சதவிகித ஊழியர்களுடன் செயல்படலாம். மேலும், அத்தியாவசிய தேவைக்கான இணைய வழி விற்பனை, கால் சென்டர்கள், ஐடி நிறுவனங்களும் வழக்கம் போல இயங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.