மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்யேந்திர ஜெயினுக்கு மூச்சுத் தவிப்பு ஏற்பட்டுள்ளது.
New Delhi: கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு ப்ளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்யேந்திர ஜெயின் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு வருகிறார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருப்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
சத்யேந்திர ஜெயினின் உடல்நிலையை கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவர் விரைந்து குணம் அடைய பிரார்த்திப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி சுகாதார அமைச்சருக்கு முதலில் பரிசோதனை செய்தபோது பாதிப்பு ஏதும் இல்லை என்பதைக் காட்டும் நெகடிவ் முடிவுகள் வெளி வந்தன.
இதன்பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் நீடித்தது. அதையடுத்து மீண்டும் பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் டெல்லி ராஜிவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அவர் கூடுதல் வசதிகளைக் கொண்ட பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில், டெல்லி துணை நிலை கவர்னர் அனில் பைஜால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.