வதாவன் குடும்பத்திற்குத் தான் கொடுத்த கடிதத்தில், “குடும்ப அவசரத்துக்காக” பயணப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் அமிதாப்.
ஹைலைட்ஸ்
- மகாபலேஷ்வரில் உள்ள பண்ணை வீட்டில் கபில், தீரஜ் கைது
- பல மோசடி புகார்களில் சிக்கியவர்கள் கபில் மற்றும் தீரஜ்
- ஊரடங்கு உத்தரவை மீறி வதாவன் குடும்பம் செயல்பட்டுள்ளது: போலீஸ்
New Delhi: மும்பையைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் கபில் மற்றும் தீரஜ் வதாவன் ஆகியோர், பல்வேறு மோசடி புகார்களில் சிக்கியுள்ளவர்கள். அவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீட்டில் தங்களின் குடும்பங்களைச் சேர்ந்த 21 நபர்களுடன், ஊரடங்கை மதிக்காமல் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் வெளியே தெரியவே, தற்போது பண்ணை வீட்டிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
வதாவன் குடும்பத்திற்கு உதவி செய்த காரணத்திற்காக மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். பல புகார்களில் சிக்கியுள்ள டி.எச்.எஃப்.எல் (DHFL) நிறுவனத்தின் ப்ரோமட்டர்கள்தான் கபிலும் தீரஜ்ஜும். அவர்கள் உட்பட 23 குடும்ப உறுப்பினர்கள், மகாபலேஷ்வரில் உள்ள பண்ணை வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மும்பையிலிருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பண்ணை வீட்டுக்குக் கடந்த புதன் கிழமை 5 கார்கள் மூலம் சென்றுள்ளது வதாவன் குடும்பம். அவர்களிடம் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் குப்தா கொடுத்த அனுமதிச் சீட்டு இருந்துள்ளது. அமிதாப் குப்தா ஐபிஎஸ், மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தின் செயலாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வதாவன் குடும்பத்திற்குத் தான் கொடுத்த கடிதத்தில், “குடும்ப அவசரத்துக்காக” பயணப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் அமிதாப்.
அந்த கடிதத்தில் மேலும், “இந்த கடிதம் வைத்திருப்போர் எனக்கு நன்கு பரிட்சியமான குடும்ப நண்பர்கள். அவர்கள் காந்தலாவிலிருந்து மகாபலேஷ்வருக்கு குடும்ப அவசரத்துக்காக செல்கின்றனர்… எனவே, அவர்கள் பயணப்பட நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டு, மொத்தமாக எத்தனை பேர் பயணப்படுகிறார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலீஸ் தரப்பு தரும் தகவல்படி, வதாவன் குடும்பத்தினர் தங்களின் சமையல்காரர்கள் மற்றும் பணியாட்களை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அனைவருக்கு எதிராகவும் தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கபில் மற்றும் தீரஜ் மீது சிபிஐ ‘லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. யெஸ் வங்கி மற்றும் டி.எச்.எஃப்.எல் மோசடி புகார்களில் அவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
மோசடி புகார்கள் தொடர்பாக அமலாக்கத் துறை கடந்த மாதம் தீரஜ் மற்றும் கபிலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதற்கு அவர்கள் எந்த வித சரியான பதிலும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரச்சினை தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், மாநில எதிர்க்கட்சியான பாஜக, சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும் மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் தேஷ்முக், “வதாவன் குடும்பத்திற்கு எப்படி பயணம் செய்ய அனுமதி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்கப்படும்” என்று மட்டும் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.