This Article is From May 23, 2020

'ஆரோக்ய சேது ஆப் அடிப்படையில் குவாரண்டைன் தீர்மானிக்கப்படும்' - மத்திய அரசு தகவல்

கடந்த வெள்ளியன்று விமானப்போக்குவரத்து குறித்து கருத்து தெரிவித்த தமிழக அரசு, விமான சேவையை தொடங்குவதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சென்னையில் விமானப் போக்குவரத்தை தொடங்க கூடாது என்றும் வலியுறுத்தியது.

'ஆரோக்ய சேது ஆப் அடிப்படையில் குவாரண்டைன் தீர்மானிக்கப்படும்' - மத்திய அரசு தகவல்

விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

New Delhi:

திங்கள் முதற்கொண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவுள்ள நிலையில், விமான பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்களா என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. சில மாநில முதல்வர்கள் விமான பயணிகள், தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து இன்று விளக்கம் அளித்த விமானப்போக்கு வரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஆரோக்ய சேது ஆப்பில் 'பச்சை' நிறத்தில் பயணியின் ஸ்டேட்டஸ் காண்பிக்கப்பட்டால் அவருக்கு குவாரண்டைன் கிடையாது என்று கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் அமைச்சர் அளித்த பேட்டியில் விமான பயணத்திற்கான கட்டணம் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் திங்களன்று தொடங்கவிருக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடர்பாக மத்திய அமைச்சர் கூறியதாவது-

சர்வதேச விமானங்கள் ஜூன் நடுப்பகுதி அல்லது ஜூலை இறுதிக்குள் இயக்கப்படும். இதற்காக நாம் ஆகஸ்ட் வரை ஏன் காத்திருக்க வேண்டும். நிலைமை சீரடைந்து விட்டால் அதற்கு முன்னதாகவே போக்குவரத்தை தொடங்கலாம்.

ஆரோக்ய சேது செயலியில் பயணிக்கு பச்சை நிற ஸ்டேட்டஸ் காட்டப்பட்டால் அவருக்கு குவாரண்டைன் தேவையில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட 6 மாநிலங்கள், விமான பயணிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது. 

5aat4duc

சென்னை விமான நிலையம்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், இன்னொரு 7 நாட்கள் வீட்டில் அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.

கடந்த வெள்ளியன்று விமானப்போக்குவரத்து குறித்து கருத்து தெரிவித்த தமிழக அரசு, விமான சேவையை தொடங்குவதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சென்னையில் விமானப் போக்குவரத்தை தொடங்க கூடாது என்றும் வலியுறுத்தியது. 

இதற்கிடையே, தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 6,654 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த நான்கு நாட்களில் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 3,720 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 137 பேர் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 13வது இடத்தில் உள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நான்காவது முறையாக முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஒரு லட்சம் மக்களுக்கு 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் இந்த எண்ணிக்கையானது  7.9 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இறப்பு விதத்திலும் இந்தியா மாறுபட்டுள்ளது. உலக நாடுகளில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது 4.2 என்கிற விகிதத்தில் இருக்கையில் இந்தியாவில் இது 0.24 ஆக உள்ளது. கடந்த மார்ச் மாத்தில் மீட்பு விகிதம் நாடு முழுவதும் 7.1ஆக இருந்த நிலையில் தற்போது இந்த விகிதம் 40.31 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.