This Article is From May 16, 2020

இந்தியாவிற்கு வென்டிலேட்டர்களை வழங்கும் அமெரிக்கா!

“இந்த தொற்று நோய் தாக்குதலின்போது நாங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், இந்திய மக்களுடனும் துணை நிற்கின்றோம்“

இந்தியாவிற்கு வென்டிலேட்டர்களை வழங்கும் அமெரிக்கா!

இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.

New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 86 ஆயிரத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், அமெரிக்கா வென்டிலேட்டர்களை நன்கொடையாக இந்தியாவிற்கு அளிக்க முன்வந்துள்ளது. “இந்த தொற்று நோய் தாக்குதலின்போது நாங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், இந்திய மக்களுடனும் துணை நிற்கின்றோம்“ என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் டிவிட் செய்துள்ளார். சர்வதேச அளவில் கொரேனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும், இரு நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சிறந்தவர்கள் என்றும் புகழ்ந்துள்ளார் டிரம்ப்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்கான முயற்சிக்கு "ஆபரேஷன் வார்ப் ஸ்பீடு" என பெயரிட்டு, மூத்த மருத்துவத்துறை அதிகாரியை நியமித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “ நான் சமீபத்தில் இந்தியா சென்று திரும்பியுள்ளேன். அமெரிக்காவில் இந்தியர்களின் மக்கள் தொகை கணிசமான அளவில் உள்ளது. தடுப்பூசிக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.“ என வெள்ளை மாளிகையில் ரோஸ் கார்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.

இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதோடு, மோடி ஒரு நல்ல நண்பன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளுக்கு கட்டுபாடுகளை இந்தியா விதித்திருந்தது. ஆனால், அமெரிக்கா “இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தினை தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கவில்லையெனில், விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்“ என எச்சரித்திருந்தது. இதன் பின்னர் இந்தியா அமெரிக்காவுக்கு 29 மில்லியன் அளவு மருந்து வாங்குவதற்று அனுமதி அளித்ததையடுத்து டிரம்ப் தனது நன்றியை தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தற்போது சர்வதேச அளவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தற்போது சீனாவை காட்டிலும் அதிக அளவு கொரோன தொற்று எண்ணிக்கையை கொண்டிருந்தாலும், இறப்பு விகிதத்தில் சீனாவைவிட குறைவாகவே உள்ளது. சீனாவின் இறப்பு விகிதம் 5.5 சதவிகிதமாகவும், இந்தியாவின் இறப்பு விகிதம் 3.2 சதவிகிதமாகவும் உள்ளது. இந்தியாவில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

சர்வதேச அளவில் 44 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இதில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக உள்ளனர். ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தலா 2 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 

(With inputs from agencies)

.