This Article is From Mar 06, 2020

'கொரோனா பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' - மத்திய அரசு உத்தரவு

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

'கொரோனா பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்' - மத்திய அரசு உத்தரவு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
  • இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
  • மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்க அறிவுறுத்தல்
New Delhi:

இந்தியாவில் மொத்தம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்கள், சி.பி.எஸ்.இ.-ன் தலைவர் உள்ளிட்டோருக்கு மனித வளத்துறை செயலர் அமித் காரே அனுப்பியுள்ளார். 

அதில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா போன்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பறவைக் காய்ச்சல் போன்றவை குறித்தும் மாணவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மாணவர்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தங்களது குடும்பத்தினரிடமும், சமூகத்தினரிடமும் தெரிவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

அடிக்கடி கைகளைக் கழுவுதல், கைக்குட்டையைப் பயன்படுத்தித் தும்முதல், இருமுதல், சுகாதார இருத்தல், முடிந்தவரை பொது இடங்களில் கூடுவதைத் தவிர்த்தல் உள்ளிட்டவற்றைச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதியதாக ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இன்று ராஜ்யசபாவில், கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். 

கடைசியாக பேடிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் குர்கானில் உள்ள அந்நிறுவனத்தில் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா, தற்போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதற்காக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சீனா, ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்ய வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதேபோல், மற்ற இதர நாடுகளுக்கும் தேவையில்லாத பயணத்தைத் தவிர்க்குமாறும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

.