ஏர் இந்தியா விமானங்கள் கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்து வருகின்றன.
New Delhi: தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 63 ஆயிரத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் கிட்டதட்ட அனைத்து துறைசார்ந்த நபர்களையும் கொரோனா தாக்கியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது விமானிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஐந்து விமானிகள், தங்களது கடைசி பயணத்தின் 20 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஐந்து விமானிகள், ஒரு பொறியியலாளர், மற்றும் எர் இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். 77 விமானிகளுக்கு கொரோனா பரிசோதரன மேற்கொள்ளப்பட்டபோது இவ்வாறாக தொற்று இருப்பதை கண்டறிந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட ஐந்து விமானிகளுக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில் ஐவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விமானிகள் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிவந்திருந்தனர். கடைசியாக ஏப்ரல் 20 அன்று விமானத்தை இயக்கியிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து வகையான போக்குவரத்தும் முடக்கப்பட்டன. இதன் காரணமாக இத்தாலி, ஈரான் உள்ளிட்ட கொரோனா தொற்று உள்ள நாடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு வருவதற்காக விமானதுறை செயல்பட்டது. 326 பயணிகளுடன் முதல் மீட்பு விமானம் லண்டனில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
மே 7 அன்று முதல்கட்ட மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டது. இவ்வாறாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 15,000இந்தியர்களை மீட்க 64 விமானங்களை விமானதுறை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி மற்றும் மும்பையை சேர்ந்த 100 சுகாதார ஊழியர்கள் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். விமானதுறை இந்நிலையில் இருக்க பாதுகாப்பு துறையிலும் கொரோனா தொற்று பரவலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் உள்ள 250 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இரண்டு பி.எஸ்.எஃப் ஜவான்கள் மற்றும் டெல்லி காவல்துறையை சார்ந்தவர்கள் தொற்றால் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.