மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு!
ஹைலைட்ஸ்
- மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு
- டிரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இந்தியா முடிவு
- ஊகங்களுக்கும், அரசியலுக்கும் இடமளிக்கவில்லை என இந்தியா கருத்து
New Delhi: கொரோனா வைரஸ் தொற்று மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறும்போது, கொரோனாவின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, சர்வதேச நாடுகளிடையே வலுவான ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் காட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீவாஸ்தவா கூறும்போது, மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு, நமது திறன்களைச் சார்ந்துள்ள நமது அண்டை நாடுகளுக்கு பாராசிட்டமல் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆகியவற்றை தேவையான அளவில் உரிமம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு, இந்த அத்தியாவசிய மருந்துகளை நாங்கள் வழங்குவோம். எனவே, இதன்மூலம் எந்த ஊகங்களுக்கும், அரசியலுக்கும் இடமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்து ஒரு வார காலம் கடந்துள்ள நிலையில் டிரம்பின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
“ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, ஏற்றுமதி செய்யாமல் இருக்குமென்றால் நான் ஆச்சரியப்படுவேன். அவர்தான் அது குறித்து என்னிடம் சொல்ல வேண்டும். நான் பிரதமர் மோடியிடம், ஞாயிற்றுக்கிழமை கூட பேசினேன். அப்போது எங்களின் மருந்துகள் வருவதை அனுமதிப்பதற்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தற்போது மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவர் சொன்னால் பரவாயில்லை. அதே நேரத்தில், அதற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
உலகளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளதாகவும், 114 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.