அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ்.
ஹைலைட்ஸ்
- டெல்லியில் இருந்து அரியானாவுக்கு வந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு
- ஊரடங்கால் அரியானா தொழிலாளர்கள் டெல்லியில் பல இடங்களில் சிக்கியுள்ளனர்
- அரியானா தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்க அமைச்சர் கோரிக்கை
New Delhi: 'டெல்லியில் இருந்து வந்து கொரோனாவை பரப்பி விடுவார்கள்' என்று கூறி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அரியானா அமைச்சர் அனில் விஜ் எழுதியிருக்கும் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியும், அரியானாவும் அருகருகே அமைந்துள்ளன. இங்கு டெல்லியில் இருந்து வருவோர் கொரோனாவை அரியானாவில் பரப்பி விடுவதாகவும், அவர்கள் வராமல் தடுக்கும் வகையில் தங்குமிடம், உணவு அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனில் விஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-
டெல்லியில் அரியானாவை சேர்ந்தவர்கள் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் கொரோனாவை பரப்புபவர்களாக மாற வாய்ப்பு உள்ளது.
முன்பு தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்து அரியானாவுக்கு வந்தனர். அவர்களில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். இப்போது, டெல்லியில் உள்ள பல அரியானா மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக்கு கிளம்புவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தங்குமிடம், உணவு போன்ற வசதிகள் இல்லாததால் அவர்கள் இவ்வாறு சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர். அவர்கள் கொரோனா வைரசை பரப்புபவர்களாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை டெல்லி அரசு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
சோனிபத் நகரில் டெல்லியில் இருந்து வந்த 9 பேருக்கு கொரோனா உள்ளது. ஒரு பெண் போலீஸ் அதிகாரி டெல்லி போலீசின் சகோதரியாக உள்ளார். அவர் தனது சகோதரனிடம் இருந்து கொரோனாவை பெற்றுள்ளார். இப்போது ஒட்டுமொத்த குடும்பமும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, தங்குமிடம், உணவு உள்ளிட்டவற்றை அரியானா மாநில மக்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
அரியானா எல்லையை ஒட்டியுள்ள டெல்லியில் சுமர் 3 ஆயிரம்பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அரியானாவில் 280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 27 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 800 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.