இந்தியாவுக்கு வர அனைத்து விசாக்களும், ஏப்.15ம் தேதி வரை ரத்து.
ஹைலைட்ஸ்
- கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுக்கு வர விசாக்கள் ரத்து
- ஏப்.15ம்தேதி வரை விசாக்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
- ஐநா.சபை, சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு விலக்கு
New Delhi: கொரோனா வைரஸ் தொற்று, பரவாமல் தடுக்கும் விதமாக இந்தியாவிற்கு வருவதற்காக வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67ஆக அதிகரித்துள்ளது. இதில் இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே பெரும்பாலானோர் ஆவார்கள்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐநா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்கள் தவிர்த்து மற்ற அனைத்து விசாக்களும், ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் அமைச்சர்கள் குழு நேற்றிரவு ஆலோசனை மேற்கொண்டது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, விசாக்கள் தடை குறித்து இந்த அறிவிப்புகள் வெளியானது. தொடர்ந்து, இந்த விதிமுறையானது நாளை முதல் அமலாகிறது. கொரோனா தீவிரம் காரணமாக இதுவரை 19 நாடுகள் விசாக்களுக்கு தடை விதித்துள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதாவது, உலகளவில் பரவி ஏராளமான மக்களைப் பாதித்து வரும் நோய் என்று குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு தனது அடுத்தடுத்து ட்வீட்களில், ஆபத்தான வகையில் பரவும் இந்த கொரோனா வைரஸின் தீவிரத்தன்மையால் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (ஓசிஐ) அட்டை வைத்திருப்பவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் உட்பட அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசாக்கள் ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அந்த குறிப்பில், பிப்.15ம் தேதிக்குப் பின்னர், இத்தாலி, ஈரான், சீனா, தென்கொரியா, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த இந்தியர்கள் உட்பட அனைத்து சுற்றுலா பயணிகளும், கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கேரளா மற்றும் கர்நாடகாவில் புதிதாகச் சிலருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்புகள் இருப்பது உறுதியாகியுள்ளது. அதில், இரண்டு பேர் மும்பையிலும், எட்டு பேர் புனேவிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தொடக்கப் பள்ளிகள் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மற்றும் லடாக்கிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.