லாக்டவுன் காலத்திலும் வரிகளை உயர்த்துவது கொடூரமானது: ப.சிதம்பரம் கண்டனம்
ஹைலைட்ஸ்
- லாக்டவுன் காலத்திலும் வரிகளை உயர்த்துவது கொடூரமானது
- நடுத்தர மக்கள், ஏழைகளை இந்த வரிச்சுமை மேலும் வேதனைப்படுத்தும்
- மக்களிடம் இருக்கும் பணத்தையும் பறிக்கக் கூடாது.
New Delhi: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட லாக்டவுனில் சிக்கித் தவித்துவரும் மக்களின் கைகளில் அரசு பணத்தை கொடுக்க வேண்டுமே தவிர, வரியை உயர்த்தி மக்களை மேலும் சிரமப்படுத்தக்கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில், உச்சத்தில் இருக்கும் போதுதான் புதிய வரி விதிக்கலாம், வரியை உயர்த்தலாம். ஆனால், இந்த சமயத்தில் வரி விதிப்பது என்பது கொடூரமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே லாக்டவுனால் பெரும்துன்பத்தில் சிக்கித் தவித்து வரும் நடுத்தர மக்கள், ஏழைகளை இந்த வரிச்சுமை மேலும் வேதனைப்படுத்தும், ஏழ்மையில் தள்ளும்.
இதுபோன்ற சூழ்நிலையில், அரசு மக்களின் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டுமே தவிர, அவர்களிடம் இருக்கும் பணத்தையும் பறிக்கக் கூடாது.
நாட்டு மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு பணத்தை நேரடியாக வழங்கிடுங்கள் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசோ மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்தே பணத்தை எடுப்பது கொடுமையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சர்வேதச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தநிலையில் அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லி்ட்டருக்கு 13 ரூபாயும் உற்பத்தி வரியில் மத்திய அரசு நேற்று உயர்த்தியதை தொடர்ந்து, முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பெட்ரோலியத்துறை அதிகாரிகள் கூறும்போது, இந்த வரி உயர்வால், பெட்ரோல், டீசல் சில்லறை விற்னை விலையில் எந்த மாற்றமும் எற்படாது என்றும், கச்சா எண்ணெய் விலை குறைவில் அதனை சரி செய்து கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியானது, லிட்டருக்கு ரூ.2ஆகவும், சாலை செஸ் வரி லிட்டருக்கு ரூ.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ.5ஆகவும், சாலை செஸ் வரி லிட்டருக்கு ரூ.8ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் மீதான கலால் வரி மொத்தமாக லிட்டருக்கு ரூ.32.98ஆகவும், டீசல் மீதான கலால் வரி ரூ.11.83ஆகவும் உயர்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் எரிப்பொருட்களுக்கான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு உயர்த்தியதால், நேற்று முதல் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.67ம் டீசலுக்கு ரூ.7.10ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் வாடிக்கையாளர்கள் தற்போது, பெட்ரோலுக்கு ரூ.71.26, டீசலுக்கு ரூ.69.39ம் செலுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் ஊரடங்கால் வருமானம் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில், மதுபானத்திற்கான வரியையும் அரசு உயர்த்தியுள்ளது.