This Article is From Jun 16, 2020

சீனாவின் பீஜிங்கில் ‘மிகத் தீவிரமாக’ உள்ளது கொரோனா தொற்று என எச்சரிக்கை!

தொற்று தீவிரமடைந்ததை அடுத்து, பீஜிங்கிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லும் வாடகை கார் சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பீஜிங்கில் ‘மிகத் தீவிரமாக’ உள்ளது கொரோனா தொற்று என எச்சரிக்கை!

பீஜிங்கில் இருந்து மற்ற நகரங்களுக்குச் செல்வோர் அனைவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது
  • இதனால் பல கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன
  • கொரோனா சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன
Beijing:

சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்று ‘மிகத் தீவிரமாக' மாறி வருகிறது என்று நகரின் அரசு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிழமையான இன்று மட்டும் பீஜிங்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பீஜிங்கின் ஷின்ஃபாடி மொத்த உணவுச் சந்தையில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததை அடுத்து, லாக்டவுன் மற்றும் அதிக டெஸ்டிங் மூலம் தொற்று பரவல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பீஜிங்கில் புதியதாக 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 30 இடங்களில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை அரசு தரப்பு விதித்துள்ளது. 

இது குறித்து பீஜிங் நகர செய்தித் தொடர்பாளர் ஷூ ஹெஜியான், ‘கொரோனா தொற்று விவகாரம் பீஜிங்கில் தீவிரமடைந்து வருகிறது' என்றார். 

உலக சுகாதார அமைப்பும், பீஜிங்கில் ஜன நெருக்கடி அதிகமாக இருப்பதால் தற்போது பரவி வரும் தொற்று குறித்து அச்சம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பீஜிங் நகரில் உள்ள உணவுச் சந்தைகள், உணவகங்கள், அரசு கேன்டீன்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பீஜிங்கில் ஒரு நாளைக்கு 90,000 கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

தொற்று தீவிரமடைந்ததை அடுத்து, பீஜிங்கிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லும் வாடகை கார் சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உள் அரங்க விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்குக் கூடங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. பீஜிங்கில் இருந்து மற்ற நகரங்களுக்குச் செல்வோர் அனைவரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பீஜிங் அடுத்துள்ள ஹீபே மாகாணத்திலும் சில கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக சீனாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் சிலருக்குத்தான் கொரோனா தொற்று இருந்ததே தவிர, உள்ளூரில் யாருக்கும் தொற்று இருக்கவில்லை. 

இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உள்ளூரில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி வந்தது என்பது குறித்து சீன அரசுத் தரப்பு விசாரணை செய்து வருகிறது. சீனாவுக்கு வெளியில் இருந்து வந்த விஷயம் மூலம் இந்தத் தொற்றுப் பரவல் ஆரம்பித்திருக்கலாம் என்று தற்போது யூகிக்கப்படுகிறது. 

.