மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களே அதிகம்.
ஹைலைட்ஸ்
- மவுலானா சாதுக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது
- மவுலான சாத் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
- சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக மவுலான சாத் கூறியுள்ளார்
New Delhi: டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், அதன் தலைவர் மவுலானா சாத் காந்தலவி, தான் சுய தனிமைப்படுத்துதலில் இருப்பதாக ஆடியோ மெசேஜ் ஒன்ற வெளியிட்டுள்ளார். அவர் கடைசியாக மார்ச் 28-ம்தேதி பொதுவெளியில் காணப்பட்டார்.
டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 2 ஆயிரம்பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. அவர்களில் 400-க்கும் அதிகமானோர் டெல்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம். இந்த நிலையில், நேற்று 1,103 பேர் தாமாக முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, தப்லீக் ஜமாத்தின் தலைமையிடமான டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக மவுலான சாத் காந்தலவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்காக உத்தரப்பிரதேசத்திற்கு தனிப்படைகள் அனுப்பப்பட்டுள்ளன. கொரோனா பரவல் எச்சரிக்கைகளை மீறி, மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு மவுலானா சாத் மீது சுமத்தப்பட்டுள்ளது.
நிஜாமுதீன் மர்கஸில் இருப்பவர்கள் வெளியேறும்படி போலீசார் 2 முறை நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதனை மர்கஸ் நிர்வாகம் அலட்சியப்படுத்தியதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் சுய தனிமைப்படுத்துதலில் இருப்பதாக மவுலானா சாத் 2 ஆடியோ மெசேஜ்களை வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது-
உயிரை விடுவதற்கு மசூதியை விட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை. தப்லீக் ஜமாத்தினர் அதிக எண்ணிக்கையில் கூட வேண்டாம். உலகில் நடந்து கொண்டிருப்பது எல்லாம், மனிதன் செய்த பாவத்தினால்தான் ஏற்பட்டிருக்கிறது. இதில் சந்தேகமே இல்லை.
நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதுமட்டும்தான் இறைவனின் கோபத்திலிருந்து தப்புவதற்கு ஒரே வழி. மருத்தவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். அரசு நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். எங்கிருந்தாலும் நீங்கள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது இஸ்லாத்திற்கு எதிரானது அல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.