Coronavirus: 'இந்தியா, எப்போது கொரோனா வைரஸை எதிர்த்து வெற்றி கொள்கிறதோ, அப்போது எனது பார்வையை விரிவாக சொல்வேன்.'
ஹைலைட்ஸ்
- ராகுல் காந்தி, இன்று காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார்
- சுமார் ஒரு மணி நேரம் செய்தியாளர்களிடம் உரையாடினார் ராகுல்
- மத்திய அரசுக்குப் பல்வேறு யோசனைகளை வழங்கினார் ராகுல் காந்தி
New Delhi: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, இன்று காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர், “ஊரடங்கு உத்தரவினால் கொரோனா வைரஸை வீழ்த்தி விட முடியாது. இந்த ஊரடங்கினால் கொரோனா பரவலை சிறிது காலம் தடுத்து வைக்கலாம். கொரோனா வைரஸை வீழ்த்த ஒரே வழி, சோதனைகளை அதிகமாக்குவதுதான். அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொண்டு கொரோனா வைரஸை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அரசுக்கு என் ஒரே அறிவுரை,” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “நரேந்திர மோடிஜியுடன் பல விஷயங்களில் நான் முரண்படலாம். ஆனால், தற்போது அது குறித்து சண்டை போடுவதற்கான நேரமல்ல. இன்று நாம் ஒன்றிணைந்து பொது எதிரியை எதிர்த்துப் போராட வேண்டும்.
இந்தியா, எப்போது கொரோனா வைரஸை எதிர்த்து வெற்றி கொள்கிறதோ, அப்போது எனது பார்வையை விரிவாக சொல்வேன். ஆனால், இன்று நான் நேர்மறையாக பேச விரும்புகிறேன். தனிப்பட்ட முறையிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ நான் சச்சரவுகளில் ஈடுபட மாட்டேன்,” என்று விளக்கினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார். குறிப்பாக கொரோனா வைரஸை வீழ்த்துவது குறித்துப் பேசும்போது, “கொரோனா வைரஸ் விவகாரத்தில் மாநிலங்களுக்குத்தான் அதிக அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மோடி, மாநிலங்களிடம் மிக விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். ஆனால், மோடிஜி வித்தியாசமான முறையில் வேலை செய்கிறார். அதற்கு ஏற்றாற் போலும் நம்மால் பணியாற்ற முடியும்.
மத்திய அரசு, இந்தப் போராட்டத்தில் முக்கியமான விஷயங்களை மட்டும் தன் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மற்றவை எல்லாம் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மாநில அரசு, தங்கள் ஆளுகைக்குக் கீழ் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும்,” என்று எடுத்துரைத்தார்.