This Article is From Mar 31, 2020

ரெயின்கோட், ஹெல்மெட்டுடன் கொரோனாவை விரட்ட போராடும் இந்திய மருத்துவர்கள்!

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக உள்நாட்டிலும், தென்கொரியா மற்றும் சீனாவிலும் இதுபோன்ற உபகரணங்களை மொத்தமாக வாங்க முயற்சிப்பதாக மத்திய அரசு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.

ரெயின்கோட், ஹெல்மெட்டுடன் கொரோனாவை விரட்ட போராடும் இந்திய மருத்துவர்கள்!

பாதுகாப்பு உபகரணங்கள் தட்டுபாடு காரணமாக சில மருத்துவர்கள் ரெயின் கோட், ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • பாதுகாப்பு உபகரணங்களை வாங்க முயற்சிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது
  • இந்தியாவில் 1,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஜிடிபியில் சுமார் 1.3 சதவீதத்தை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது
New Delhi:

நாடு முழுவதும் பாதுகாப்பு உபகரணங்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ரெயின்கோட், ஹெல்மெட்டை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் விதமாக உள்நாட்டிலும், தென்கொரியா மற்றும் சீனாவிலும் இதுபோன்ற உபகரணங்களை மொத்தமாக வாங்க முயற்சிப்பதாக மத்திய அரசு நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. 

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 32 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படிப்பட்ட தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சரியான முககவசம், பாதுகாப்பு ஆடைகள் இல்லாமல், அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படலாம் என்ற கவலையில் உள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

கொல்கத்தாவில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் முக்கிய மருத்துவமனையான பெலகாட்டா தொற்று நோய் மருத்துவமனையில் உள்ள ஜூனியர் மருத்துவர்களுக்கு கடந்த வாரம் நோயாளிகளை பரிசோதிக்க பிளாஸ்டிக் ரெயின்கோட்டுகள் வழங்கப்பட்டதாக அங்குள்ள இரண்டு மருத்துவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

எங்கள் உயிரை பணையம் வைத்து எங்களால் பணி செய்ய முடியாது என கூறிய மருத்துவர் ஒருவர் தனது பெயரை தெரிவிக்க மறுத்துவிட்டார். 

இதுதொடர்பாக அந்த மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஆசிஸ் மன்னாவிடம் பேசியபோது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். 

ஹரியானாவில், இஎஸ்ஐ மருத்துவமனையின் டாக்டர் சந்தீப் கார்க், அவர்களிடம் N95 முகக்கவசங்கள் இல்லாததால், தனது இருசக்கர வாகன ஹெல்மெட்டை பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

மேலும், சந்தீப் கார்க் கூறும்போது, ஹெல்மெட்டிற்கு முன்னால் ஒரு வைசர் உள்ளது, எனவே அது நான் ஏற்கனவே அணிந்திருக்கும் அறுவை சிகிச்சை முகக்கவசத்திற்கு மேல் மற்றொரு அடுக்காக இருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1.3 சதவீதத்தை பொது சுகாதாரத்திற்காக செலவிடுகிறது, இது உலகிலே மிகக் குறைவானது ஆகும்.

ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள அம்மாநில அரசு மருத்துவமனையில், பல ஜூனியர் மருத்துவர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது என மறுத்து வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் சேர்ந்து, கொரோனா நிதியையும் திரட்டினர். அதில் ஒவ்வொரு மருத்துவரும் முககவசம் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தலா ரூ.1,000 பங்களித்தனர் என்று மருத்துவர்களில் ஒருவர் கூறினார்.

"யாரும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய விரும்பவில்லை." என்றும் "அனைவரும் பயப்படுகிறார்கள்," என்றும் மருத்துவர் ஒருவர் கூறினார். 

.