களத்தில் பணியாற்றி வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள், மருத்தவர்கள், கோவிட்-19க்கான பரிசோதனையை மிக அதிகமாகவும் பரவலாகவும் செய்ய வேண்டும் என்கின்றனர்
ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்து 2 வாரங்கள் நிறைவடைந்துள்ளது
- நேற்று மோடி, எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடினார்
- முன்னதாக மாநில முதல்வர்களுடன் மோடி கலந்துரையாடினார்
நாடு முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கிட்டத்தட்ட 2 வாரங்கள் முடிவடைய உள்ள நிலையில், “இந்தியா மிக இக்கட்டான இரு வார காலத்திற்குள் நுழைகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸின் மூத்த நிர்வாகி ப.சிதம்பரம். நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து இப்படியொரு கருத்தைத் தெரிவித்துள்ளார் சிதம்பரம்.
இந்தியாவில் தற்போது வரை 4,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரம், “கொரோனா போராட்டத்திற்கு எதிராக இந்தியா மிக இக்கட்டான இரு வார காலத்திற்குள் நுழைகிறது. உலகமும்தான். எதிர்க்கட்சிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியது நல்ல விஷயம். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை,” என்றவர்,
தொடர்ந்து, “அரசின் நடவடிக்கைகளில் சில குறைபாடுகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன என்றால், அது முறையான விமர்சனம் மற்றும் ஒத்துழைப்புக்காகத்தான்.
களத்தில் பணியாற்றி வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள், மருத்தவர்கள், கோவிட்-19க்கான பரிசோதனையை மிக அதிகமாகவும் பரவலாகவும் செய்ய வேண்டும் என்கின்றனர். எனவே, அதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக் கிழமையான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டில், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா, மற்றும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸின் சோனியா காந்தி, சமாஜ்வாடி கட்சியின் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ், திரிணாமூல் காங்கிரஸின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஒடிசா மூதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்து 2 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் நடந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு எப்படி நீக்கப்பட வேண்டும், எந்த வகையில் நீக்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடலின் போது விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.