டெல்லி ஷாஹின்பாக்கில் டிசம்பர் 15-ம்தேதி முதற்கொண்டு போராட்டம் நடந்து வருகிறது.
ஹைலைட்ஸ்
- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது
- கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம்தேதி போராட்டம் ஆரம்பித்தது
- கொரோனா அச்சுறுத்தலால் போராட்டத்தை கைவிட கோரிக்கை எழுந்துள்ளது
New Delhi: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கவனத்தில் கொண்டு, டெல்லி ஷாஹின்பாக் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு டெல்லி போலீசாரும், குடியிருப்போர் நலச் சங்கத்தினரும் போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனாவை தொற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மக்கள் ஒன்று கூடுவதால் நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 அல்லது அதற்கு அதிகமானோர் கூடுவதற்குத் தடை விதித்திருக்கிறது டெல்லி அரசு.
இதற்கிடையே குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஷாஹின்பாக்கில் கடந்த டிசம்பர் 15-ம்தேதி முதற்கொண்டு தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஷாஹின்பாக்கில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதால் அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு போராட்டக்காரர்களுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக சமூக, குடும்ப, அரசியல், கலாச்சார ரீதியில் மக்கள் 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு டெல்லி அரசு தடை விதித்தது. இம்மாத இறுதி வரையில் இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126-ல் இருந்து 137-ஆக உயர்ந்திருக்கிறது.