ஊரடங்கு 4.0 குறித்த பரிந்துரைகள்: கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைப்பு!!
New Delhi: பொருளாதாரத்தை சீர்படுத்த 4வது கட்ட ஊரடங்கில் எவையெல்லாம் இயங்க வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அனுப்பி வைத்துள்ளார். அதில், டெல்லியில் உள்ள வணிக வளாகங்கள் 33சதவீத கடைகளுடன் இயங்க அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல நடவடிக்கைகளுக்கு அவர் பிரந்துரைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள கடிதத்தில், கட்டுப்பாட்டு மண்டலங்களில் எந்த தளர்வுகளும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர்த்து பிற பகுதிகளில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் சமூக விலகலுடன் மீண்டும் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். எனினும், அந்த சூழ்நிலையை சமாளிக்க நாங்கள் மருத்துவமனைகள், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ்கள், ஐசியுக்கள் உள்ளிட்ட அனைத்தையும் தாயாராக வைத்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும், மே.18ம் தேதி முதல் தொடங்கவுள்ள நான்காவது கட்ட ஊரடங்கு குறித்து விவாதித்தார். அப்போது அவர் மாநிலங்களின் கருத்துகளையும் அவர்கள் எப்படி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதையும் தெரிவிக்குமாறு கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில், பல்வேறு பரிந்துரைகளையும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஒற்றைப்படை, இரட்டைப்படை அடிப்படையில் அனைத்து சந்தைகளும், வணிகவளாகங்களும் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், கடை எண் படி, அவர்கள் வெவ்வேறு தினங்களில் கடைகளை திறக்கலாம். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் 50 சதவீத கடைகள் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்..
அதேபோல், வணிக வளாகங்களில் 33சதவீத கடைகளை திறக்க அனுமதி அளிக்கும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுத்துறை ஊழியர்களுக்காக மெட்ரோ சேவைக்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல், இ-பாஸ் வைத்திருப்பவர்களுக்கும், அத்தியாவசிய தேவையில்லாத பொருட்களை டெலிவரி செய்பவர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.