அதிகாரப்பூர்வமாக கொரோனா வைரஸ் என்பது கோவிட் - 19 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- இலங்கையில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பரவியுள்ளது
- இத்தாலிய பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவருக்கு கொரோனா பாதிப்பு
- இலங்கையில் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
உலகில் 100-க்கும் அதிகமான நாடுகளைத் தாக்கியுள்ள கொரோனா வைரஸ், இலங்கையில் தனது தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது. இங்கு அங்கோடா பகுதியைச் சேர்ந்த 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் சமீபத்தில், இத்தாலியச் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் அவரிடம் சோதனைகள் நடத்தப்பட்டு கடைசியில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கையின் தினசரி நாளிதழான டெய்லி மிர்ரர் வெளியிட்டுள்ளது.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் அங்கோடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
முன்னதாக 43 வயதான சீன சுற்றுலாப் பயணி இலங்கை வந்தபோது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றார்.
அதிகாரப்பூர்வமாக கொரோனா வைரஸ் என்பது கோவிட் - 19 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. முதலில், சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் உருவான கொரோனா, தற்போது 107 நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,260- ஆக உயர்ந்துள்ளது. 1,18,100 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.