This Article is From May 14, 2020

வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்: இதுவரை 2,600 பேருக்கு பாதிப்பு- விரிவான அலசல்!

வியாழக் கிழமை காலை வரை தமிழகத்தில் 9,227 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்: இதுவரை 2,600 பேருக்கு பாதிப்பு- விரிவான அலசல்!

Coronavirus Tamil Nadu: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்

  • கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது
  • கோயம்பேடு மார்க்கெட் தற்போது மூடப்பட்டுள்ளது
  • மொத்த வியாபார சந்தையாக இருந்தது கோயம்பேடு மார்க்கெட்
Chennai:

சென்னையில் இருக்கும் மொத்த வியாபார சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து மட்டும் இதுவரை 2,600 பேருக்கு கொரோனா பரவியிருப்பது சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று NDTV-யிடம் தகவல் தெரிவித்துள்ளார் தமிழக அரசு அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன். சிறப்பு நோடல் அதிகாரியான அவர், கோயம்பேடு மார்க்கெட் குறித்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் அது ஹாட் ஸ்பாட்டாக மாறிவிட்டதாக சொல்கிறார். 

இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் தொடர்பானவர்களுக்கு அதிகம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதே இந்த பாதிப்பு அதிகரிப்புக்கான காரணமாக மாறியது. இதனால் தமிழகம், டெல்லியை முந்திக் கொண்டு இந்திய அளவில் பாதிக்கப்பட்ட மூன்றாவது பெரிய மாநிலமாக உருவெடுத்தது. வியாழக் கிழமை காலை வரை தமிழகத்தில் 9,227 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

“கோயம்பேடு மார்க்கெட்டைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுவிட்டது. அதில்தான் 2,600 பேருக்கு பாசிடிவ் என சோதனை முடிவு வந்துள்ளது. தொடர்ந்து தொற்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கறார் நடவடிக்கைகள் மூலம் கண்டறிந்துள்ளோம். இதுவரை 2.6 லட்சம் மக்களிடம் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இறப்பு விகிதம் என்பது மிகக் குறைவாக 0.67 சதவீதத்தில்தான் உள்ளது.” என்று சொல்கிறார் ராதாகிருஷ்ணன். 

மேலும் அவர், “நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. மருத்துவமனைகளில் இட வசதி அதிகமாகவே உள்ளது. தொடர்ந்து கோவிட்-19 குறித்து முனைப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். 

மக்கள் பதற்றமடையாமல் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கை கழுவுதல், முகவுரை அணிதல் மற்றும் மற்றவர்களிடத்திலிருந்து விலகி இருத்தல் உள்ளிட்ட விஷயங்களை பின்பற்ற வேண்டும். மக்கள் நடந்து கொள்வதில் 100 சதவீத மாற்றம் வேண்டும். மக்கள் கொரோனா வைரஸோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்,” என்று விரிவாக விளக்கினார். 

தமிழகத்தில் நடைமுறையிலிருந்த பல கட்டுப்பாடுகளை கடந்த திங்கட்கிழமை முதல் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. இதன் மூலம் மக்கள் வசிக்கும் இடத்தில் கடைகள், தனியார் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் நாள் முழுக்கத் திறந்திருக்க வழிவகை செய்யப்பட்டது. 

இந்திய அளவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவானது வரும் மே 17 ஆம் தேதியோடு முடிவடைகிறது. மீண்டும் ஊரடங்கு மற்றும் முடக்க நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லியிருக்கிறார். ஆனால், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, மாநில அரசுகளின் பரிந்துரைகள்படியே அது அமல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

இந்திய அளவில் இதுவரை 80,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 2,549 பேர் உயிரிழந்துள்ளார்கள். கடந்த ஆண்டு சீனாவின் உஹான் நகரத்தில் தோன்றிய இந்த நோய் தொற்றினால் உலக அளவில் சுமார் 43.47 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சம் பேர் இறந்துள்ளார்கள். 

.