This Article is From May 20, 2020

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடம் பிடித்த தமிழகம்!

செவ்வாய் கிழமை வரை நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தான் இரண்டாவது இடம் வகித்தது.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடம் பிடித்த தமிழகம்!

Coronavirus in Tamil Nadu: மே 20 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 7,672 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • நேற்று தமிழகத்தில் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
  • இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 84 பேர் உயிரிழப்பு
Chennai:

தமிழகத்தில் நேற்று 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 552 பேர். ஒட்டுமொத்த அளவில் 12,448 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 489 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 4,895 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால், தற்போது தமிழகத்தில் 7,466 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 84 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

மே 20 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 7,672 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,931 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 57 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 5,640 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

செவ்வாய் கிழமை வரை நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தான் இரண்டாவது இடம் வகித்தது. செவ்வாய் கிழமை வரை குஜராத்தில் 11,745 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். 

மகாராஷ்டிராவில் போடப்பட்டுள்ள முழு முடக்க நடவடிக்கைகளில் எந்தவித தளர்வுகளும் கொடுக்கப்படாத நிலையில், தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளில் சலூன் கடைகள் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் பலவும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வாகனத் துறை உற்பத்திக்கு மிக முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது தமிழகம். காஞ்சிபுரத்தில் உள்ள யமஹா மோட்டர் தொழிற்சாலை, தேவையான அனுமதிகள் பெற்று தனது தொழிற்சாலையை மீண்டும் திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

முன்னதாக மே 7 ஆம் தேதி, டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்தது தமிழக அரசு. அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, தீர்ப்பு தமிழக அரசுக்கு எதிராக வந்தது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. அங்கு சாதகமாக தீர்ப்பு வரவே, கடந்த 15 ஆம் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ளது மாநில அரசு. ஒரு நாளைக்கு டாஸ்மாக் கடைகளில் 500 டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. 


 

.