நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,73,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 86,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 82,370 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல 4,971 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில், 7,964 பேர் நாடு முழுவதும் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவாக 265 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், தெலுங்கானா மற்றும் அசாம் மாநிலங்கள் கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் கொரோனா தொற்று நோயாளிகளை தங்கள் மாநிலங்களில் புதியதாக அடையாளம் கண்டுள்ளது.
- மகாராஷ்டிராவை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக உயிரிழந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 2,098 ஆக உயர்ந்துள்ளது. 62 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் நேற்று 874 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 20 ஆயிரத்தினை கடந்துள்ளது.
- இதே போல தெலுங்கானா மாநிலத்தில் 169 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,425 ஆக அதிகரித்துள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களை பொறுத்த அளவில், அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாநிலத்தில் புதியதாக 177 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக தொற்றால் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கையானது 2,000ஐ கடந்துள்ளது. மாநிலத்தில் மே 22 தொடங்கி நான்காவது முறையாக நேற்று அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- பிரதமராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில், “சர்வதேச அளவில் இது நெருக்கடியான காலகட்டம்தான். ஆனால், இந்தியாவிற்கு இது ஒரு உறுதியான தீர்வுக்கான நேரமாகும். நாட்டின் 130 கோடி மக்களும் ஒருபோதும் தவறான பாதையில் வழிநடத்தப்படமாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இதே நாளில் இந்தியாவிற்கு ஒரு பொற்காலம் தொடங்கியது. பல காலகட்டங்களுக்கு பிறகு மக்கள் முழு பெரும்பான்மையுடன் முந்தைய ஆட்சியிலிருந்த அதே கட்சிக்கு வாக்களித்திருந்தனர்.“ என குறிப்பிட்டிருந்தார்.
- மேலும், “கொரோனா தொற்று இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்திய தொடங்கியவுடன், பல உலக நாடுகள், இந்தியா உலகிற்கு ஒரு பிரச்னையாக மாறக்கூடும் எனக் கருதியது. ஆனால், இன்று பல உலக நாடுகள் நம்மை பார்க்கும் வித்தினை மக்களாகிய நீங்கள் மாற்றியமைத்துள்ளீர்கள். இந்தியாவின் ஆற்றல் என்பது கூட்டு வலிமை என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். இந்த ஆற்றலானது வளமான பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இணையற்றது என்றும் கொரோனா தொற்று நோய் தடுப்பில் இந்தியா எடுத்திருந்த சிறப்பான முடிவுகளை போல, பொருளாதார மறு தொடக்கத்திலும் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணதாக சிறந்த முடிவுகளை மேற்கொள்ளும்.“ என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- நாடு ஒரு புறம் கொரோனா தொற்றினை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் விவசாயிகள் மற்றொரு பிரச்னையை எதிர்கொண்டிருக்கின்றனர். கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களை விவசாயிகள் எதிர்க்கொண்டிருக்கின்றனர். இது விவசாயிகளுக்கு மட்டுமல்லாது விமான போக்குவரத்திற்கும்(தரையிறங்குதல்/மேலெழுதல்) பாதிப்பினை ஏற்படுத்தும் என விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- உலகம் முழுவதும் 60 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3.6 லட்சம் மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
- அமெரிக்கா உலக அளவில் கொரோனா தொற்று பரவலின் மையாக உருவெடுத்துள்ளது. நேற்று மட்டும் 1,225 பேர் அந்நாட்டில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,02,798 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொற்று பரவலை குறைக்க உலக சுகாதார நிறுவனம் தவறிவிட்டது எனக்கூறி அமெரிக்காவுக்கும் உலக சுகாதார நிறுவனத்திற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்துள்ளார்.