இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதித்தோருக்கு டெக்சாமெதாசோனை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி
- மிதமானது முதல் அதிகம் பாதித்தவருக்கு இந்த மருந்தை அளிக்க அனுமதி
- வீக்கம், கட்டிகளை குணப்படுத்த டெக்சாமெதாசோன் பயன்படுத்தப்படுகிறது
New Delhi: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்டீராய்டு மருந்தான டெக்சாமொசோனை, மெதில்பிரிட்னிசோலானுக்கு பதிலாக அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மிதமான மற்றும் தீவிர அறிகுறி கொண்டவர்களுக்கு இந்த மருந்தை அளிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக டெக்சாமெதாசோன் மருந்து இங்கிலாந்தில் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த மருந்து, கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து சர்வதேச சுகாதார நிறுவனமான WHO டெக்சாமொசோனை அதிகளவு தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த மருந்தை கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவது தொடர்பான உத்தரவை மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இம்மாத தொடக்கத்தின்போது, வாசனை மற்று சுவை உணர்வு இழப்பு கொரோனா பாதிப்பின் அறிகுறி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் ஆக்ஸிஜன் தேவை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் அல்லது அதைவிட பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இந்த டெக்சாமெதாசோனை வழங்கலாம்.
இந்த மருந்து கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் கிடைக்கிறது. பொதுவாக டெக்சாமெதாசோன் வீக்கம், கட்டிகளை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும். இதனை சுமார் 2 ஆயிரம் தீவிர கொரோனா பாதிப்பு உள்ளோருக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டபோது, இறப்பு வீதம் 35 சதவீதம் குறைந்ததாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் ஏற்படுத்தப்பட்ட வல்லுனர் குழு தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹெட்ரோ ரெம்டெசிவிர் எனப்படும் கொரோனா எதிர்ப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இதனிடமிருந்து 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 18 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது.