இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஜனவரியில் கண்டுபிடிக்கப்பட்டது
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.6 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், இந்தியா தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் வரிசையில் ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் பத்தாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களின் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த முன்னேற்றத்தை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வரையறுத்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் 1,65,386 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சீனாவின் எண்ணிக்கையை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். சீனாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 84,106 என்கிற அளவில்தான் உள்ளது. அதே போல சீனாவின் உயிரிழப்புகளைக் காட்டிலும் இந்தியா அதிகமான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,638 ஆக உள்ள நிலையில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 4,711 ஆக உயர்ந்துள்ளது.
முதன் முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த தொற்றானது தற்போது உலகம் முழுவதும் பரவி 59 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. 3.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது. ஆனால், தற்போது வெகு குறைவான பாதிப்பு எண்ணிக்கையே சமீப நாட்களில் சீனாவில் பதிவாகியுள்ளது.
அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் உலக வல்லரசு என சொல்லக்கூடிய அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் ஏறத்தாழ 17 லட்சம் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும், அதைத்தொடர்ந்து இந்தியாவும் உள்ளது. தற்போது துருக்கி 10வது இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து ஈரான், பெரு, கனடா நாடுகளும் அடுத்ததாக சீனா 14 வது இடத்திலும் உள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் பட்டியலிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடர்ந்து, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் முதல் 10 இடத்தில் உள்ளன. இதன் தொடர்ச்சியாக கனடா மற்றும் நெதர்லாந்து நாடுகள் முறையே 11 மற்றும் 12 வது இடத்திலும் இந்தியா 13வது இடத்திலும் உள்ளது.
கடந்த 14ம் தேதியன்று மூன்றாவது முறையாக நீட்டித்து அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையில் பல தளர்வுகளை இந்தியாவின் மத்திய அரசு அறிவித்ததையடுத்து சிறப்பு ரயில்கள் மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த ஒரு மாதக் காலத்தில் நாட்டில் பல பகுதிகளிலும் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது. பெரும்பாலான மாநிலங்கள் வெளி மாநிலங்களிலிருந்து திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்கள் மூலமாகவே தொற்று பாதிப்பை அதிகமாக கொண்டுள்ளன.
தற்போது நீட்டித்து அறிவிக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கையானது இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் இதனை நீட்டிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாட்டில் அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, மற்றும் சென்னை நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடனும் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில் முன்னெப்போதும் இல்லதா அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,024 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலமாக டெல்லியின் மொத்த தொற்று எண்ணிக்கையானது 16,281 ஆக உயர்ந்துள்ளது. 3,165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தினை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 2,598 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 59,546 ஆக உயர்ந்துள்ளது. 85 பேர் புதியதாக உயிரிழந்துள்ளனர். இத்துடன் சேர்த்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1,982 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தை பொறுத்த அளவில், 367 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மொத்த தொற்று எண்ணிக்கையானது 15,572 ஆக உயர்ந்துள்ளது. சமீபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 344 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டனர். இதன் மூலமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,536 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 33 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் 1.5 கோடியும், ரஷ்யாவில் 97 லட்சம் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக 40 லட்சம் பரிசோதனைகள் ஜெர்மனியிலும், 36 மற்றும் 35 லட்சம் பரிசோதனைகள் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப சோதனை அளவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியா முதல் 100 இடங்களில் கூட இல்லையென பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.