அடிப்படைக் கொள்கைகளில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்கிறார் ராகுல் காந்தி.
New Delhi: தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதை ஏற்க முடியாது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதிலிருந்து மீண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதற்கிடையே உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், தொழிலாளர்கள் சட்டம் திருத்தம் செய்யப்படுவதாகவும், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8-லிருந்து 12 மணி நேரம் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.
மாநிலங்களின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் கூறுகையில், 'பல மாநிலங்கள் தொழிலாளர்கள் சட்டத்தை திருத்துகின்றன. அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்துதான் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இதைக் காரணம் காட்டி, தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுவதையும், பணியிடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதையும், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதையும் ஏற்க முடியாது.' என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், 'பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் என்ற பெயரில் மோடி அரசு செய்யும் நடவடிக்கைகளால் வேலையின்மை ஏற்படுவதுடன் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்களும் பாதிக்கப்படும். இதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கி விட்டது. ஏற்கனவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் விளைவைப் போன்று மோசமான முடிவுகள் ஏற்படலாம்' என்று கூறியுள்ளார்.